;
Athirady Tamil News

பேராதனை மாணவர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர் !!

0

நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள். மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பேராதனை பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் நடைமுறை வாழ்வில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வருடத்தின் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதுடன், தற்கொலைக்கு முயற்சித்த இருவருக்கு பல்கலைகழக உளவியல் பிரிவு ஊடாக உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை தான் உணவு உண்கிறார்கள். மாணவர்களின் செலவுகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் அவர்களின் குடும்ப பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்துள்ளார்கள். விரிவுரைகளின் போது மாணவர்கள் மயங்கி விழுகிறார்கள் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கி துரிதகரமாக ஒரு தீர்மானத்தை எடுக்க கல்வி அமைச்சு தலையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 1 இலட்சத்து 45 ஆயிரம் மாணவர்களுக்கு மஹபொல புலமைபரிசில் திட்டம் ஊடாக மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

பல்வேறு காரணிகளினால் 11 ஆயிரம் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்படுவதில்லை. ஆகவே இந்த மாணவர்களுக்கும் புலமை பரிசில் வழங்க உரிய நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.