;
Athirady Tamil News

அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?

0

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார்.

அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.

அமெரிக்காவின் ‘பென் மசாலா’ எனும் இசைக் குழுவினர் ஹிந்தி சினிமாக்களில் (பாலிவுட்) ஹிட்டான சில திரைப்படங்களின் பாடல்களைப் பாடி, மோதியை வரவேற்றனர்.

‘சாயா சய்யா’, ‘ஜாஷ்ன் -இ-பஹாரா’ உள்ளிட்ட பாடல்களை பென் மசாலா இசைக்குழு பாடி அசத்தியது.

இசைக் கருவிகள் எதையும் இசைக்காமல், தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்துவது இந்தக் குழுவின் தனிச் சிறப்பு.

முன்னதாக, “இந்திய பிரதமரை வெள்ளை மாளிகை வரவேற்கிறது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“இன்றைய நமது பேச்சுவார்த்தை இந்தியா – அமெரிக்கா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபருக்கு தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், இந்திய பிரதமர் மோதி கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் கூறும்போது, “வெள்ளை மாளிகையில் இன்று தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, 140 கோடி இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் 40 லட்சம் இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு,” என்று கூறினார்.

அத்துடன், “முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சராசரி இந்தியனாக நான் இங்கு வந்திருந்தேன். அப்போது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்துதான் பார்த்தேன். ஆனால் இன்று அதே வெள்ளை மாளிகையின் கதவுகள் பெரும் எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினருக்காக திறந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதிக்கு, வெள்ளை மாளிகையில் இன்று அரசு முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹிந்தி திரையிசை பாடல்கள் முழங்க, பிரதமர் மோதிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்று அளித்தார். அதன்பின் அவர் பேசும்போது, “இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு 21ஆம் நூற்றாண்டின் தீர்மானிக்கத்தக்க உறவு”களில் ஒன்று என்று வர்ணித்தார்

இரண்டு நாடுகளின் அரசமைப்பு சட்டங்களும் “We The People” என்றே தொடங்குகின்றன. இது தேச மக்களின் நலனில் இரு நாடுகளும் கொண்டுள்ள முன்னுரிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்தோ -பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு எனும் இலக்கை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன,” என்று ஜோ பைடன் பேசினார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி, 30 ஆண்டுக்கு முன் தான் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தை நினைவு கூர்ந்து பேசினார்.

மேலும் அவர் பேசும்போது, “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் பெருமை கொள்கின்றன. கோவிட் காலகட்டம் மற்றும் அதற்குப் பிந்தைய தற்போதைய காலகட்டத்தில் உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்பு ஒட்டுமொத்த உலகை மேம்படுத்துவதற்குத் துணையாக இருக்கும். உலகளாவிய நன்மைக்கு, உலக அளவிலான அமைதியும், ஸ்திரத்தன்மையும் அவசியம். இந்த இலக்கை அடைய இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன,” என்று மோதி பேசினார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தபோது பிரதமர் மோதி, பாரம்பரிய வெள்ளை நிற குர்தா பைஜாமாவும், நீல நிற மேலாடையும் அணிந்திருந்தார்.

அமெரிக்காவின் பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அணி வகுத்திருந்தது. இந்திய உயர்நிலைக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடியிருந்த நிலையில் அங்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

இருவரின் உரையாடலுக்கு பிறகு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்திய சமூகத்திற்காக, வெள்ளை மாளிகையின் கதவுகள் திறந்துள்ளதற்காக பைடனுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக மோதி கூறினார்.

அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் நலன் விரும்பியாகவே இருந்து வருகிறது எனவும் அப்போது மோதி கூறினார்.

மேலும், “எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய- அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் நீங்கள் (ஜோ பைடன்) பேசும்போது, ‘இந்தியாவின் சிறந்த நண்பராக இருப்பதே உங்களின் நோக்கம்’ என்று கூறியிருந்தீர்கள். இந்தியா மீதான உங்களது தனிப்பட்ட ஈடுபாடுதான், துணிச்சலான மற்றும் லட்சியம் மிக்க முடிவுகளை எடுக்க எங்களைத் தூண்டியது,” என்று மோதி கூறினார்.

“இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவானது, இரு தரப்புக்கும் இடையே பகிரப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளில் அடங்கியுள்ளது.

இருதரப்பு உறவில் அரசு முறையிலான இதுபோன்ற நடவடிக்கைகள் அவற்றுக்கான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஆனால், உண்மையில் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு என்பது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு” என்று மோதி பெருமிதத்துடன் பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “ உலகம் இன்று வேகமாக மாறி வருகிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு இந்தியா, அமெரிக்கா, ஏன் ஒட்டுமொத்த உலகின் முன்பும் இருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு ஒருமுறையே இதுபோன்ற வாய்ப்புகள் அமையும். இன்று எடுக்கும் முடிவுகள்தான் நாளை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்கு அறிவோம்,” என்று பைடன் பேசினார்.

இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டிக் கூறியுள்ளார்.

செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தைக் குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோதியை ஜோ பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த ஒபாமா, “இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.