;
Athirady Tamil News

செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம்- கவர்னரின் முடிவு 2 நாட்களில் தெரியும்!!

0

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி 81 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற போது ஊழல் சட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் இருந்து முழுமையாக விசாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இப்போது சிகிச்சை பெறும் நிலையில் அவரது போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புழல் ஜெயில் கைதி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்கள் அமைச்சர்கள் முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார்.

அவ்வாறு இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அப்போது செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதமும் அனுப்பி இருந்தார். அதில் அரசியல் சாசனத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகள் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்ட ரீதியாக சந்திக்க போவதாகவும் தெரிவித்தார். கவர்னரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பு சட்ட நிபுணர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரை தன்னிச்சையாக நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்று சுட்டிக்காட்டினார்கள். இந்த விசயம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தெரியவந்தது. அவர் தலைமை வழக்கறிஞர் கருத்தை கேட்டு முடிவெடுங்கள் என்று கவர்னருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை அன்றிரவே நிறுத்தி வைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். அதில் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்கும் வரை உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று 6 பக்க கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அதில் எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என்றும் முதலமைச்சரின் ஆலோசனைப்படி தான் நீங்கள் செயல்பட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

அரசியல் சாசனம் 164(1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ, அல்லது நீக்கவோ முதலமைச்சரின் ஆலோசனைப் படிதான் கவர்னர் செயல்பட முடியும். அரசியல் சாசனம் 164(2)-ன்படி முதலமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே நீங்கள் எனது ஆலோசனை இல்லாமல் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்தது சட்டப்படி செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கூறியபடி கவர்னர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர். இதனால் தான் எடுத்த நடவடிக்கை குறித்தும் அதற்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ள சட்ட பிரிவைகளை சுட்டிக் காட்டியும் அட்டர்னி ஜெனரலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான கடிதம் தயாரித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தின் மீது வருகிற திங்கட்கிழமை அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிரந்தரமாக வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.