;
Athirady Tamil News

முன்னாள் அதிபர் சாகாஷ்விலி உடல்நலம் விவகாரம்: உக்ரைன் நடவடிக்கைக்கு ஜார்ஜியா கண்டனம்!!

0

ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் சாகாஷ்விலி. இவர் 2004 முதல் 2013 வரை இரண்டு முறை ஜார்ஜியாவின் அதிகபராக இருந்துள்ளார். அதன்பின் உக்ரைன் சென்று 2015-16 ஒடேசா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். இவருக்கு உக்ரைன் நாட்டின் குடியுரிமையும் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நாடு திரும்பிய அவரை, நாடு தழுவிய நகராட்சி தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி படைகளை ஒன்றிணைத்து வலுப்படுத்த முயற்சி செய்ததாக ஜார்ஜியா அரசு கைது செய்தது. மேலும், 2007-ம் ஆண்டு எதிர்க்கட்சி பேரணியின்போது வன்முறையை பரப்பியதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது போடப்பட்டுள்ளது. ஜெயிலில் இருக்கும் சாகாஷ்விலி சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் உடல் மெலிந்து காணப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது இருந்ததைவிட தற்போது பாதி எடையுடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், சிறையில் இருக்கும்போது அவருக்கு விசம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜார்ஜியா தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதில், சாகாஷ்விலியின் உடல்நலம் குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அவரை மருத்துவ பரிசோதனைக்காக உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியதோடு, ஜார்ஜியா தூதர் சொந்த நாடு திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. இதற்கு ஜார்ஜியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில உக்ரைன் நடவடிக்கை மிகவும் அதிகமானது என ஜார்ஜியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் ”உக்ரைன் அதிகாரிகள் எடுத்த இந்த முடிவால் இருநாட்டு மூலோபாய உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஒரு இறையாண்மை நாட்டின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக சாகாஷ்விலியை உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் ஜெலன்ஸ்கியும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.