;
Athirady Tamil News

2 நாட்கள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடி 13-ந்தேதி பிரான்ஸ் செல்கிறார்!!

0

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14-ந்தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார். அவரை அதிபர் மேக்ரான் வரவேற்கிறார். அன்று அவர் பாரீஸ் புறநகர் பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் செய்ன் ஆற்றில் உள்ள தீவில் இந்திய தூதரகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அதிகாரபூர்வ இல்லமான எலிசி அரண்மனையில் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தின் போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகின்றனர். மறுநாள் அவர் தேசிய தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தியா-பிரான்ஸ் இடையே உள்ள உறவின் 25-ம் ஆண்டையொட்டி நடைபெறும் இந்த பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சியில் 269 பேர் கொண்ட இந்திய பாதுகாப்பு படைகுழுவும் கலந்து கொள்ள உள்ளது.

இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் சந்தித்து பேச உள்ளனர். கால நிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள், இருநாட்டு நல்லுறவு குறித்தும் அவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. ராணுவ தளங்களின் கூட்டு தயாரிப்பு, இந்திய கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். போர் விமானங்களுக்கு ரபேல் மரைன் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.