;
Athirady Tamil News

அதீத வெப்பம், பெருமழை: ஒரே நேரத்தில் நம்மை வாட்டும் இரு பேரழிவுக்கும் பசிபிக் கடலுக்கும் என்ன தொடர்பு?!!

0

உலகில் இதுவரை அதிக வெப்பம் பதிவான நாளாக நடப்பு ஜூலையில் மூன்று நாட்கள் இடம்பெற்றுள்ளன. அதிகரித்துவரும் கடல் வெப்பம், அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகுவது போன்றவை குறித்து விஞ்ஞானிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன் வேகமும் காலமும் கணிக்கமுடியாதபடி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவை உலுக்கிவரும் ஆபத்தான வெப்ப அலைகள் வெப்ப நிலை தொடர்பாக புதிய உச்சத்தை தொடக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இந்தியாவின் பெரும் பகுதி இந்த ஆண்டு அதிக மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 40 சதவீத மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பெரும் பகுதியினர் இன்னும் மழைக்காக ஏங்குகின்றனர்.

தலைநகர் டெல்லி உட்பட பல பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த பருவமழை முந்தைய ஆண்டுகள் பதிவாகியிருந்த பலவற்றையும் முறியடித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த நகர நிர்வாகத்தின் வரைவு செயல்திட்டத்தின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றத்தால் டெல்லிக்கு ரூ.2.75 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காலநிலை மாற்றம்தான் காரணம் என்று உடனடியாக தொடர்புப்படுத்தி பேசுவது சரியாக இருக்காது. ஏனெனில் பூமியின் வானிலை மற்றும் கடல்கள் கணிப்பதற்கு மிகவும் சிக்கலானவை.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் பல மோசமான சூழ்நிலைகள் உலகின் முன் வருவதைப் பற்றி தாங்கள் அஞ்சுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் சுற்றுச்சூழல் புவியியலாளர் டாக்டர் தாமஸ் ஸ்மித் பிபிசியிடம் பேசுகையில், “தற்போது உள்ளதைப் போன்று வேறு எந்த காலகட்டத்திலும் காலநிலை அமைப்பின் அனைத்து பகுதிகளும் இதுபோல் சாதனை அளவில் சில வகையான பேரழிவுகளை எதிர்கொண்டதா என்று தெரியவில்லை.” என்றார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலைக் கற்பிக்கும் டாக்டர் பாலோ செப்பி, புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் எல் நினோ காரணமாக ஏற்பட்ட புவி வெப்பமடைதல் காரணமாக பூமி இப்போது “இதுவரை பார்க்காத நிலைக்குள் நுழைந்துள்ளது” என்று கூறுகிறார்.

இந்த கோடைகாலத்தில் இதுவரை வானிலையில் உச்சமாக இருந்த 4 விஷயங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. உலகின் வெப்பமான நாள் இந்த ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், உலகளவில் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜூன் பதிவாகியுள்ளது. சமுத்திரங்களில் தீவிரமான வெப்ப அலைகள் ஏற்பட்டது, அண்டார்டிகா கடல் பகுதியில் பனி இதுவரை இல்லாத அளவில் குறைந்துபோனது.

வானிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் நமக்கு எதனை உணர்த்துகிறது? பூமியையும் மனிதர்களையும் எதிர்காலத்தில் அவை எந்த அளவு பாதிக்கலாம்?

உலகின் வெப்பம் மிகுந்த நாள் நடப்பு ஆண்டு ஜூலையில் பதிவாகியுள்ளது. இதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு அதிகபட்ச உலகளாவிய சராசரி வெப்பநிலை பதிவானது. அந்த சாதனையும் இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் காலநிலை கண்காணிப்பு நிறுவனமான கோபர்நிகஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, உலக சராசரி வெப்பநிலை 17.08 டிகிரி செல்சியஸை எட்டியது.

கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் உமிழ்வுகளும் புவி வெப்பமடைதலுக்கான காரணங்களாக உள்ளன.

பசுமை இல்ல வாயுக்களால் பூமி வெப்பமடைவதைப் பற்றி இதுபோன்ற முன்னறிவிப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் காலநிலை விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட்ரிக் ஓட்டோ கூறுகிறார்.

“தற்போது நிகழ்ந்து வரும் போக்கின் வளர்ச்சியின் பின்னணியில் மனிதனின் பங்கு நூறு சதவிகிதம் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“பொதுவாக உலகளாவிய அளவில் எல்-நினோ செயல்முறையின் விளைவு அது தொடங்கி ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை தெரிவதில்லை. ஆனால், இந்த முறை ஜூன் மாதத்திலேயே முந்தைய பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இது எனக்கு ஆச்சரித்தை அளிக்கிறது. ” என்று தாமஸ் ஸ்மித் கூறுகிறார்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சராசரி வெப்பநிலை தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலத்தின் ஜூன் மாத வெப்பநிலையை விட 1.47 ° C அதிகமாக இருந்தது. தொழில்மயமாக்கல் 1800 இல் தொடங்கியது, அதன் பிறகு மனிதர்கள் தொடர்ந்து அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, “காலநிலையை முன்னறிவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் நீண்ட காலத்திற்குப் போக்குகளை மதிப்பிடுவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் 10 ஆண்டுகளில் நிகழும் மாற்றங்களைத் துல்லியமாக மதிப்பிட முடியாது” என்று டாக்டர் ஸ்மித் கூறுகிறார்.

“நாம் இன்று இருக்கும் இடத்தை 1990களின் மாடல்களின் படி ஒப்பிடும்போது மிக அதிகம் ஆகும். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் நிலைமை உண்மையில் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் கடினம்.”என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “அதிகரிக்கும் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று தெரியவில்லை.” என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார்
கடல் வெப்பமயமாதல்

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சராசரி உலகளாவிய கடல் வெப்பநிலை இதற்கு முன்பாக பதிவாகியிருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கடலின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டு அதனையும் தாண்டி பதிவாகியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் அதிக வெப்பம் காரணமாக, அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“அட்லாண்டிக் பெருங்கடலின் இந்தப் பகுதியில் நாம் இதற்கு முன்பு வெப்ப அலைகளைப் பார்த்ததில்லை” என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் டேனிலா ஷ்மிட்.

கடந்த 2016ம் ஆண்டு கடலின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டு அதனையும் தாண்டி பதிவாகியுள்ளது.

ஜூன் மாதத்தில், அயர்லாந்தின் மேற்கு கடற்கரையில் வெப்பநிலை சராசரியை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அதை ஐந்தாம் வகை வெப்ப அலை என்று அழைத்தது. இதன் பொருள், “மிக அதிக” வெப்ப அலைகள் என்பதாகும்.

வெப்பநிலை உயரும் இந்த நிகழ்வை காலநிலை மாற்றத்துடன் இணைப்பது சிக்கலானது, அதேநேரத்தில் இது நடக்கிறது என்று நீங்கள் கூறலாம் என்கிறார் பேராசிரியர் டேனிலா ஷ்மிட்.

பூமி வெப்பமடைகிறது என்பதும், கடல்கள் வளிமண்டலத்தில் உள்ள சூடான காற்றை உறிஞ்சுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் விளக்குகிறார்.

உலகின் 50 சதவீத ஆக்ஸிஜன் கடலில் இருந்துதான் கிடைக்கிறது.

கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து டேனிலா ஷ்மிட் பேசும்போது, “வெப்ப அலைகளைப் பற்றி பேசும்போது, ​​மக்கள் பெரும்பாலும் மரங்கள், புற்கள் காய்ந்துபோவதை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்.” என்றார்.

“அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பநிலை இயல்பாக இருக்க வேண்டியதை விட 5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பமாக உள்ளது. இதன் பொருள் உயிரினங்கள் சாதாரணமாக செயல்பட 50% கூடுதல் உணவு தேவைப்படுகிறது.” என்கிறார் அவர்.

ஜூலை மாதத்தில், அண்டார்டிகா கடலில் இருக்கும் பனிப் படலத்தில் வரலாறு காணாத குறைவு ஏற்பட்டுள்ளது

ஜூலை மாதத்தில், அண்டார்டிகா கடலில் இருக்கும் பனிப் படலத்தில் வரலாறு காணாத குறைவு ஏற்பட்டுள்ளது. 1981 முதல் 2010 வரையிலான சராசரியுடன் ஒப்பிடும் போது, அண்டார்டிகாவில் இருந்து பிரிட்டனை விட 10 மடங்கு பரப்பளவிலான பனி உருகியுள்ளது.

இது ஒரு எச்சரிக்கை மணி என்று கூறும் விஞ்ஞானிகள், பனி உருகுதலுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வேயின் மருத்துவர் கரோலின் ஹோம்ஸ் கூறுகையில், புவி வெப்பமயமாதல் காரணமாகக் கூட அண்டார்டிக் கடலின் பனி உருகலாம், ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், இது அப்பகுதியின் வானிலை மாற்றங்களால் கூட இருக்கலாம் அல்லது கடல் அலைகள் காரணமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது என்கிறார்.

1981 முதல் 2010 வரையிலான சராசரியுடன் ஒப்பிடும் போது, அண்டார்டிகாவில் இருந்து பிரிட்டனை விட 10 மடங்கு பரப்பளவிலான பனி உருகியுள்ளது

“இந்த ஜூலைக்கு முன்பு இதுபோன்ற ஒரு நிகழ்வை நாம் பார்த்ததில்லை. இதற்கு முன்பும் பனி படலம் குறைந்திருக்கிறது. ஆனால், இந்த முறை வழக்கமாக இருப்பதை விட 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பனி படலம் உள்ளது. மாற்றம் எவ்வளவு வேகமாக நடக்கிறது என்பதை நாம் உண்மையில் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கான அறிகுறி இது.” என்று கரோலின் ஹோம்ஸ் விளக்குகிறார்.

புவி வெப்பமடைதல் ஒரு கட்டத்தில் அண்டார்டிகா பனியை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பினர், ஆனால் 2015 வரை இது மற்ற பெருங்கடல்களில் உலகளாவிய போக்கைத் தடுத்தது.

“தற்போது நிகழ்ந்துவரும் மாற்றங்களின் வேகத்தின் காரணமாக இது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன். இது நிச்சயமாக நாம் பார்க்கும் சிறந்த சூழ்நிலை அல்ல, இது மோசமான சூழ்நிலைக்கு நெருக்கமானது, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.

வருங்காலங்களில் இந்த நிலை மேலும் மோசமாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது நிகழ்ந்துவருவது அனைத்தும் வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாததால் ஏற்படுபவை என்று ஃப்ரீடெரிக் ஓட்டோ எச்சரிக்கிறார்.

“நாம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தில் இருக்கிறோம். அதே நேரம் பலருக்கும் வாழ தகுதியான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு நமக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்கள்: மார்க் பாயின்டிங்ஸ் மற்றும் பெக்கி டே

You might also like

Leave A Reply

Your email address will not be published.