;
Athirady Tamil News

பிணக் குவியலிலிருந்து மீட்கப்பட்ட தாய்க்குப் பிறந்தவரா விளாதிமீர் புதின்? வைரலாகும் கதை!

0

இரண்டாம் உலகப் போரின் போது பிணக் குவியலிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவர்தான் தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் என்று ஒரு கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

இது கடந்த ஒரு சில ஆண்டுகளாக அவ்வப்போது வைரலாவதும், பிறகு மறந்து போவதுமாக உள்ளது.

இந்தக் கதையின் உண்மை நிலவரம் பற்றி சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் எழுதியிருக்கும் நூலில், புதின் பற்றிய ஒரு கதை இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கதை விவரிக்கிறது. உண்மையில் அந்தப் புத்தகத்தில் ஹிலாரி கிளிண்டன் அவ்வாறுதான் எழுதியும் இருக்கிறார்.

அதாவது, இரண்டாம் உலகப் போரின்போது, முன்களத்தில் பணியாற்றிய ரஷிய வீரர், சிறு விடுப்பில் வீடு திரும்புகிறார். தங்களுடைய குடியிருப்புக்கு வந்த போது, அது போரில் நாசமாகியிருப்பதைக் காண்கிறார். அவ்வழியே தன் குடும்பத்தினரை தேடிச் செல்லும் அவர், ஓரிடத்தில் உடல்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி, மீட்பு வாகனத்துக்காகக் காத்திருப்பதைக் கண்டார்.

அங்குச் சென்று பார்த்தபோது, ஒரு காலணியை அடையாளம் காண்கிறார். அது தனது மனைவிக்காக அவர் வாங்கியது. காலைப் பிடித்துக் கொண்டு அழும்போது, அவர் உயிரோடு இருப்பதை உணர்கிறார். உடனடியாக பிணக் குவியலிலிருந்து அவரது மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு விளாதிமிர் புதின் என பெயர் சூட்டுகிறார்கள் என அந்த கதை விவரிக்கிறது.

இந்த பதிவில், விளாதிமீர் குழந்தையாக தன்னுடைய தாய் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

ஆனால், 2000ஆவது ஆண்டில், தன்னுடைய சுய சரிதையை விவரித்த புதின் சொன்ன கதை வேறாக உள்ளது. போருக்குச் சென்ற தந்தை அங்கேயே இருப்பது போன்றும் தாய், அவரது சகோதரருடன் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், போரின் போது காயமடைந்து தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதுதான், தாய் அவரை தேடிக் கண்டடைவதாகவும் விவரித்துள்ளார்.

புத்தகம் எழுதியிருக்கும் ஹிலாரி கிளிண்டனோ, புதின் வாழ்க்கை மற்றும் பிறப்பு குறித்து இந்தக் கதைகள் என்னிடம் வந்து சேர்ந்தன. ஆனால், இதனை உறுதிசெய்துகொள்ள எனக்கு எந்தவொரு வழிகளும் இல்லை என்று விவரிக்கிறார்.

இந்தக் கதைக்கும், புதின் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருப்பது பற்றி அரசியல் ஆர்வலர்கள் பேசும்போது, பொதுவாகவே, உலகத் தலைவர்கள், தங்களது வாழ்க்கை பற்றி சில தகவல்களை மறைத்துத்தான் கூறுவார்கள். அதனைக் கொண்டு தற்போதைய நடவடிக்கைகளை விமர்சிக்கக் கூடும் என்பதால் சில உண்மைத் தன்மைகளை அப்படியே அப்பட்டமாகக் கூற முடியாது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஹிலாரி கிளிண்டன் அல்லது புதின் சொல்வதில் எது உண்மை என்பதை இதுவரை உறுதி செய்யும் ஆதாரங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.