;
Athirady Tamil News

டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது- எதிர்க்கட்சி கூட்டணியை விளாசிய அமித் ஷா!!

0

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விஷயத்தில் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக பாராளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு உள்துறை மந்திரி அமித் ஷா பதிலுரை வழங்கினார். அப்போது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றும், டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமித் ஷா கூறினார்.

மேலும் இந்த மசோதாவைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தையும் அமித் ஷா முன்வைத்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறிவிடும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படவில்லை, கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் என சாடினார். அமித் ஷா பதிலுரை வழங்கிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.