;
Athirady Tamil News

பல லட்சம் செலவழித்து உயிருக்கே ஆபத்தான பயணத்தை இவர்கள் மேற்கொள்வது ஏன்? என்ன பிரச்னை?

0

ஐரோப்பிய நாடுகளில் வேலைதேடி ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் லிபியா வழியாகப் பயணிக்கின்றனர். இது ஆபத்தான படகுப் பயணம், பேரழிவு அச்சம் போன்றவற்றை உள்ளடக்கியது.

கிரீஸ் அருகே கடந்த ஜுன் மாதம் அதிக எண்ணிக்கையிலானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. லிபியா மற்றும் எகிப்து நாடுகளை நோக்கி பாகிஸ்தானிலிருந்து இந்த ஆண்டு பயணம் மேற்கொண்ட சுமார் 13,000 பேரில் பெரும்பாலானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அதில் இரண்டு பதின்ம வயதினர் அவர்களது தாயிடம் “எதற்கும் கவலைப்படவேண்டாம்” என கடைசியாகப் பேசியது மட்டும் தெரியவந்துள்ளது. அவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண காவல் நிலையங்களில் இது தொடர்பாக 35C (95F) பிரிவுகளில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் அளித்தவர்கள் கவலைகளுடன் காத்திருக்க, காவல் துறையினர் பலரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த காவல் நிலையத்தில் ஒரு குறுகிய திறந்தவெளி நடைபாதைக்குக் கிழே, காகிதக் குப்பைகளால் நிரம்பிய சிறிய அறை ஒன்று எங்களுக்குக் காட்டப்பட்டது. அங்கே இருந்த சிமெண்ட் தரையில் அருகருகே 16 பேர் அமர்ந்திருந்தனர். அந்த சுவற்றில் தண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. அதற்குப் பின்னால் ஒரே ஒரு கழிவறை இருந்தது. அறையின் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு காற்றாடி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது.

அங்கே அமர்ந்திருந்த 16 பேரும், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை சட்டவிரோதமாக, ஆபத்தான வழிகளில் அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜுன் 14ம் தேதி கிரீஸ் நாட்டுக்கு அருகே மூழ்கிய கப்பலில் பயணம் செய்தவர்களை அழைத்துச் சென்றதாக நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். லிபியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்தக் கப்பலில் பயணம் செய்து தண்ணீரில் மூழ்கிய 300 பாகிஸ்தானியர்கள் என்ன ஆனார்கள் என்றே இதுவரை தெரியாத நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் இருக்கும் 16 பேரில் ஹுஸ்னைன் ஷாவும் ஒருவராக சிறைபடுத்தப்பட்டுள்ளார்.

அங்கே அமர வைக்கப்பட்டிருந்தவர்கள் யாராவது எங்களுடன் பேசுவார்களா எனக்கேட்டோம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அதற்கு முன்வரவில்லை. இருப்பினும் ஒரே ஒருவர்- ஹுஸ்னைன் ஷா மட்டுமே எங்களுடன் பேசினார். தற்போது அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமாக அவர் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இருப்பினும் கிரீஸ் நாட்டுக்கு அருகே மூழ்கிய கப்பலில் பயணம் செய்தவர்களை அவர் அனுப்பிவைக்கவில்லை என்றார்.

“இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனால் வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை வாங்கித் தருபவர்கள் யாராவது இருக்கிறார்களா என பொதுமக்கள் கேட்கின்றனர்,” என்றார் அவர். இதுவரை இது போல் ஆயிரக்கணக்கானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் கூறினார்.

“எனக்கு வேறு எந்தத் தொழிலும் செய்யும் வாய்ப்புகள் கிடைக்காததால் இந்த தொழிலை நான் செய்துவருகிறேன். இப்பணிகளில் நான் எதுவும் பெரும் பங்கு வகிப்பதில்லை. லிபியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் தான் இத் தொழிலை மேற்கொள்கின்றனர். அவர்கள் சொல்லும் வேலையைச் செய்துகொண்டு, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களிடம் வசூலிக்கும் தொகையை அவர்களிடம் நான் கொடுத்துவிடுவேன். அதில் வெறும் பத்து சதவிகிதம் தான் அவர்கள் எனக்குக் கொடுப்பார்கள்.”

ஆனால், லிபியா வழியாகப் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழக்கும் நிலையில், இத்தொழிலை மேற்கொள்வது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா என நான் அவரிடம் கேட்டபோது, அவருக்கு கவலை ஏற்பட்டதை உணரமுடிந்தது.

“இது போல் பலர் உயிரிழப்பது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னால் என்ன செய்யமுடியும்? நான் இத்தொழிலைச் செய்யாவிட்டால் வேறு யாராவது அதைச் செய்வார்கள்.”

ஐரோப்பாவிற்குச் செல்ல விரும்புபவர்களை லிபியா வழியாக கடத்தல்காரர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

தடுமாறும் பொருளாதாரச் சூழலில் நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து 40 சதவிகிதத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. பொதுமக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் இங்கிருக்கும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகின்றனர். குறைந்த அளவு சம்பளம் கிடைத்தால் கூட அது போன்ற வேலைக்குச் செல்ல அவர்கள் தயாராக உள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஆண்களில் 62 சதவிகிதம் பேர், குறிப்பாக 15 முதல் 24 வயதுடையவர்கள் இங்கிருந்து வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். இதில் சிலர் சட்டப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையில், மற்றவர்கள் பிற வழிகளைத் தேடுகின்றனர்.

இதனால் சட்டவிரோதப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையைத் தெளிவாகத் தெரிவிக்கமுடியாது. ஆனால், அண்மையில் கிரீஸ் நாட்டுக்கு அருகே கப்பல் மூழ்கிய விபத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் மேற்கொள்வது தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து எகிப்து அல்லது லிபியா சென்று அந்நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து பெரிய படகுகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆனால், துருக்கி போன்ற நாடுகள் சட்டவிரோதப் பயணங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பாகிஸ்தானிலிருந்து ஈரான் வழியாகப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சட்டவிரோதப் பயணங்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியான ஆலம் ஷின்வாரி கூறுகிறார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், கடந்த ஆண்டில் 7,000 பேர் இது போல் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து எகிப்து அல்லது லிபியாவுக்கு 13,000 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 10,000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

“அவர்கள் லிபியாவிலேயே இன்னும் இருக்கிறார்களா, அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டை அடைந்துவிட்டார்களா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.”

பாகிஸ்தானியர்கள் துபாய் மற்றும் எகிப்து நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து படகுகள் மூலம் பயணத்தைத் தொடர்கின்றனர்.

கிரீஸ் நாட்டுக்கு அருகே கப்பல் விபத்து ஏற்படும் வரை இது போல் பாகிஸ்தானியர்கள் பயணம் மேற்கொள்வது அல்லது எத்தனை பேர் இது போல் பயணம் மேற்கொண்டனர் என்பது குறித்து அந்நாட்டு போலீசாருக்கு எதுவும் தெரியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமேற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் இப்படிப் பாகிஸ்தானியர்கள் துருக்கி மற்றும் லிபியா வழியாக பயணம் மேற்கொண்ட போது, இத்தாலி கடற்கரைக்கு அருகே இதே போல் ஒரு படகு விபத்து ஏற்பட்டது.

ஆனால், இதுபோல் பயணம் மேற்கொள்பவர்களின் குடும்பத்தினர் காவல் துறையை நாடும் வரை, இந்த பயண வழித்தடங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் கடினமானது என ஷின்வாரி தெரிவிக்கிறார்.

“மக்கள் புகார் அளிக்கத் தயங்குகின்றனர். அதற்குப் பதிலாக நீதிமன்றத்துக்கு வெளியில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயல்கின்றனர்,” என்கிறார் அவர். “இது போன்ற விவகாரங்கள் குறித்த விசாரணைகளைத் தொடர்வதில் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் எந்தக் குடும்பத்தினரும் எங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு அளிப்பதில்லை.”

இதில் வேறு பல சிக்கல்களும் உள்ளன. இப்படிப் பயணம் மேற்கொண்டவர்களில் பலர் சட்டப்பூர்வமாக பாகிஸ்தானிலிருந்து துபாய் அல்லது எகிப்து சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்கள் சுற்றுலா விசா போன்ற காரணங்களைத் தெரிவித்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது அந்தப் பயணங்களைத் தடுக்கவே முடியாது. இது போன்ற பயணங்களின் போது, ஈரான் வழியாகப் பயணம் மேற்கொள்வதைவிட அதிக செலவுபிடிக்கும். இதற்குக் குறைந்தது பாகிஸ்தான் ரூபாயில் 25 முதல் 30 லட்சம் வரை செலவாகும். இங்கிருந்து வெளியேற பலர் இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கின்றனர்.

இருப்பினும், இது போல் சட்டவிரோதப் பயணங்களை மேற்கொள்பவர்களைத் தடுக்க பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்ட சுமார் 19,000 பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மேலும் 20,000 பேர் பிற நாடுகளில் இருந்து திருப்பி பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஷின்வாரி கூறுகிறார்.

“எத்தனை பேர் இப்பயணங்களை மேற்கொள்கின்றனர்,” எனக் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை,” என்றார் அவர்.

ஆனால் இப்படிப் பயணம் மேற்கொண்ட பலர் தற்போது லிவியாவில் தத்தளித்து வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரிடம் இது தொடர்பாகப் பேசினோம். அப்போது அப்பகுதியில் இருந்த ஏராளமான ஆண்கள் அங்கே கூடிவிட்டனர்.

அவர்களின் வீடுகளில் இருந்து வெளிநாட்டு வேலைக்கனவுகளுடன் சென்ற இளைஞர்கள் தற்போது லிபியாவில் தவித்து வருகின்றனர் என்பதை நாங்கள் அப்போது தெரிந்துகொண்டோம். அவர்கள் அங்கே செலவு செய்வதற்குப் போதிய பணம் இல்லாமல் குரல் பதிவுகள், வீடியோக்கள் மூலம் பணம் கேட்டு உருக்கமான வேண்டுகோள்களை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பிவைக்கின்றனர்.

இது போல் தனக்கு வந்த வீடியோ ஒன்றை ஒரு தந்தை காட்டினார். அதில் ஜன்னல்களே இல்லாத, வெள்ளையான சுவர்களுடன் கூடிய ஒரு அறைக்குள் 100 பேர் இருக்கின்றனர். நிலமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அந்த அறைக்குள் இருக்கும் வெப்பத்தைச் சமாளிப்பதற்காக அவர்கள் தங்கள் ஆடைகளைக் கூட களைந்துவிட்டுத் தவிக்கின்றனர். அவர்களில் பலர் எப்படியாவது தங்களை அங்கிருந்து வெளியேற்ற உதவுமாறு பரிதவிப்புடன் வேண்டுகோள் வைக்கின்றனனர்.

காணாமல் போன தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடியோக்களை அவர்களின் குடும்பத்தினர் பிபிசியிடம் வேதனையுடன் காட்டினர்

இங்கே மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கே தவிப்பவர்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கிய நிலையில், இன்னும் அதே கும்பலிடம் அவர்கள் சிக்கியிருக்கிறார்களா அல்லது தப்பித்துவிட்டார்களா என எதுவுமே தெரியாத சூழல் காணப்படுகிறது. எங்களிடம் பேசியவர்கள் அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

“அவர்களுக்கு கடத்தல்காரர்கள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு கொடுக்கின்றனர்,” என ஒரு தந்தை என்னிடம் தெரிவித்தார். “எனது மகன் வேதனையில் அழுகிறார். அவருக்கு 18 வயது மட்டுமே ஆகிறது. அவர்கள் அங்கே சென்றதிலிருந்து அந்த ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் அனைத்து பிரச்னைகளையும் எங்களிடம் சொன்னார். நாங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு இங்கே இறந்துகொண்டிருக்கிறோம்.”

இவ்வளவு தகவல்களையும் தரும் பெற்றோர்கள், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியமுடியாத நிலை காணப்படுகிறது. தொடக்கத்தில் அந்த இளைஞர்கள் ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பான வழிகளைத் தான் தேடியுள்ளனர். ஆனால் இப்போது அவர்கள் வீடு திரும்பவேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த விஷயம் குறித்து நன்கு அறிந்திருக்கிறது என்பதுடன், இது போன்ற சட்டவிரோதப் பயணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடு முழுவதும் எங்களிடம் பேசியவர்களில் பெரும்பாலானோர், இது போன்ற காவல் துறை நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், அவர்களுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாகப் பயணம் மேற்கொள்ளவே விரும்புகின்றனர்.

இப்படி வேலைக்காக ஆட்களை அழைத்துச் செல்லும், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நபர் எங்களிடம் பேசிய போது, பாகிஸ்தானிலிருந்து ஈரான் வழியாகப் பயணம் செய்யும் சம்பவங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்றும், போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் கூட அது தெரியும் என்றும் கூறினார்.

வெளிநாடு செல்ல விரும்பியவர்கள் அல்லது தங்களது மகன்களை அனுப்ப விரும்பியவர்களிடம் நாங்கள் பேசிய போது, எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்ற விருப்பத்தையே தெரிவித்தனர்.

சிலர் சமூக ரீதியாக ஏற்படும் அழுத்தங்களைப் பற்றிப் பேசினர். ஏற்கெனவே தனது உறவினர்களில் பெரும்பாலானோர் இப்படி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற நிலையில், ஏதாவது விழாக்களில் சந்திக்கும் போது, அவர்கள் தனக்கும் வெளிநாடு சென்று வேலை தேட அழுத்தம் கொடுப்பதாக ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சிலர், வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்தவர்கள் கட்டியிருக்கும் பிரமிப்பூட்டும் வீடுகளைப் பார்க்கும் போது, இந்த ஆட்கடத்தல் நபர்கள் ஆசை வார்த்தை கூறினால், தங்கள் பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்வதைத் தவிற வேறு வழியில்லை எனத்தெரிவித்தனர்.

ஒரு சிலர் ஏற்கெனவே அவர்கள் தாங்களாக மேற்கொண்ட பயணங்கள் குறித்த கதைகளைக் கூறினர்.

ஃபரீத் மற்றும் நஜ்மா ஹுசைனின் இரண்டு மகன்களும் ஜூன் மாதம் கிரீஸ் கடற்பகுதியில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

ஃபரீத் ஹுசைன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனிக்குச் சென்றார். இந்த பயணத்தின் போது அவர் துருக்கி நாட்டுக்கு கிரீஸ், மேசடோனியா, செர்பியா, குரோஷியா மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் வழியாகப் பயணம் மேற்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டபோது, அவர் தாயகம் திரும்பி, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். பின்னர் அவரை அழைத்துச் சென்ற அதே நபர்கள் தற்போது அவரது பதின்மவயது மகன்களை அனுப்புமாறு கேட்கின்றனர்.

“ஐரோப்பா நமக்கு வெகு அருகில், நமது கண்முன்னே இருப்பதைப் போல் அவர்கள் நம்மை நம்பவைக்கின்றனர்,” என்கிறார் ஃபரீத். “எனது மகன்கள் அங்கே செல்கின்றனர். பின்னர் ஒரு பெரும் தொகையைச் சம்பாதித்து, இங்கே வந்து நல்ல வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு விருப்பமானதை வாங்குகின்றனர்.”

“நாங்கள் ஏழை மக்கள். எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் நன்றாக கல்வி கற்றாலும், அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பதில்லை. எங்களுக்குப் போதிய அளவு நிலமும் இல்லை. எனவே அவர்கள் அங்கு செல்வார்கள் என்றும், அங்கே பணியாற்றி வசதியாக வாழும் நிலைக்கு முன்னேறுவார்கள் என நான் நினைத்தேன்.”

ஃபரீத் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டுமனையை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஃபர்ஹாத், தாஹீது என்ற தனது இரண்டு மகன்களையும் ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் துபாய் மற்றும் லிபியா வழியாகப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் விமானம் ஏறிய வீடியோ காட்சிகளை பெற்றோர்கள் பார்த்தனர். லிபியாவில் ஒரு பாதுகாப்பான வீட்டில் அவர்கள் இருந்ததையும் அவர்கள் பார்த்தனர். அங்கே மேலும் பலர் தூங்கிக்கொண்டிருந்த காட்சிகளையும் அவர்கள் பார்த்தனர். பின்னர் அந்த வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது, அவர்களுடைய அம்மாவுக்கு அவர்கள் அனுப்பிய, “எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்,” என்ற குரல் பதிவு தகவலுக்குப் பின்னர் அவர்களிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

அதன்பின்னர் சில நாட்கள் கழித்து, அவர்களை அழைத்துச் சென்ற நபர்கள் அந்த குடும்பத்தைத் தொடர்புகொண்டு, தங்களது பயணம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், அதனால் இனிப்புக்களை வழங்கிக் கொண்டாடும் படியும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதற்கடுத்த நாள், அந்தக் குடும்பத்தின் உறவினர்கள் மொபைல் ஃபோன் மூலம் தொடர்புகொண்டு, புலம்பெயர்ந்த மக்கள் பயணித்த கப்பல் கடலில் மூழ்கியது குறித்த செய்திகள் வெளியாகியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அந்தக் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த போது, ஆட்களைக் கடத்தியவர்கள் தப்பிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அதன் பின் அந்த இருவரைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை அவர்களுடைய குடும்பத்துக்குக் கிடைக்கவில்லை. ஜுன் 14 அன்று கிரீஸ் கடற்பரப்பில் இருவரும் படகுடன் தண்ணீரில் மூழ்கினர். அவர்களுக்கு 15 மற்றும் 18 வயது நிரம்பியிருந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். ஒருவேளை அவர்கள் உயிரிழந்திருந்தால், அவர்களுடைய உடல்களும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்களுடைய உடல்கள் எப்போதும் கிடைக்காமல் கூட போகலாம்.

இப்போது அவர்களின் அம்மா பேசுகையில் மீண்டும் தனது மகன்களின் குரல்களை அடிக்கடி கேட்டுவிட்டு பலமணிநேரம் கதறி அழுதுகொண்டிருக்கிறார்.

இப்போது, “வறுமை தாண்டவமாடி, அதனால் உயிரே போனாலும் கூட இது போன்ற பயணங்களை யாரும் மேற்கொள்ளக்கூடாது,” என்கிறார் ஃபரீத். “எங்களுக்கு அனைவரும் அனைத்து விதமான ஆறுதலையும் அளித்தாலும், இழந்த மகன்கள் திரும்பிவரப்போவதில்லை.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.