;
Athirady Tamil News

முதலில் தைவான்; தற்போது பிலிப்பைன்ஸ்: உரிமை கோரும் சீனாவின் அடாவடித்தனம்!!

0

வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, இரண்டாம் தாமஸ் ஷோல். ஷோல் (shoal) என்பது அதிக ஆழமில்லாத ஒரு சிறிய கடற்கரை பகுதியாகும். பிஆர்பி ஸியர்ரா மேட்ரே எனும் பிலிப்பைன்ஸ் நாட்டு போர்கப்பல், இரண்டாம் உலக போரில் பயன்பட்டு வந்தது.

இதன் பயன்பாட்டு காலம் முடிவடைந்ததும் அக்கப்பலை பிலிப்பைன்ஸ் இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் நிறுத்தியது. அக்கப்பலை பிலிப்பைன்ஸ் நாட்டின் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த பிற கப்பல்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒரு தளமாக பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி வந்தது. அப்பகுதிக்கு அருகில் உள்ள மிஸ்சீஃப் ரீஃப் எனும் கடற்பாறை பகுதியை 1995-ல் சீனா கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலிப்பைன்ஸ் அக்கப்பலை இரண்டாம் தாமஸ் ஷோல் பகுதியில் 1999-ல் நிலைநிறுத்தியது. தற்போது இக்கப்பலால் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸிற்கும் இடையே சச்சரவு எழுந்துள்ளது.

அக்கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் ஷோல் தங்களுக்கு சொந்தமான ரெனாய் ஜியாவ் பகுதி என்றும் பிலிப்பைன்ஸ் அந்த இடத்தில் வேண்டுமென்றே, சட்டவிரோதமாக அக்கப்பலை நிறுத்தியிருப்பதாகவும் அதனை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து சீனா வலியுறுத்தி வருகிறது. இக்கப்பலில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு சென்ற ஒரு சிறிய கப்பல் மீது தனது நாட்டு கப்பல் ஒன்றிலிருந்து சீனா நீர் பாய்ச்சும் இயந்திரங்களை கொண்டு நீரை பாய்ச்சி விரட்ட முயற்சித்ததாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒருமுறை சீனா இக்கப்பலை அப்புறப்படுத்த வலியுறுத்தியது. இதற்கு பிலிப்பைன்ஸ் மறுப்பு தெரிவித்து விட்டது. இப்பிரச்சனையை பன்னாட்டு அரசியல் நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.