யாழில்.போதையில் சாரதி அனுமதி பத்திரமின்றி பயணிகளை ஆபத்தான முறையில் ஏற்றி சென்ற இ.போ.ச சாரதி கைது
யாழ்ப்பாணத்தில், போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகாமையில் , ஊர்காவற்துறை பொலிஸார் வீதி போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆபத்தான முறையில் மிக வேகமாக வந்ததனை அவதானித்து , பேருந்தினை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்,
சோதனையின் போது , சாரதி மது போதையில் இருந்தமையை பொலிஸார் கண்டறிந்தனர். அத்துடன் சாரதி அனுமதி பாத்திரமும் அவரிடம் சாரத்தியம் செய்யும் போது இருக்கவில்லை.
அதனை அடுத்து மது போதையில் , சாரதி அனுமதி பத்திரமின்றி பயணிகள் பேருந்தினை ஆபத்தான முறையில் செலுத்தி சென்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பயணிகள் பேருந்தினையும் பொலிஸார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
சாரதியிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.