;
Athirady Tamil News

மணிக்கு 225 கிமீ வேகம்.. அச்சுறுத்தும் சூறாவளியால் அச்சத்தில் மக்கள்..!!

0

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர். கடைசியாக 1939-ம் ஆண்டு சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது. இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளை அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து வசதி தடைபடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அவசரகால சேவை அமைப்புகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும், மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும், அங்கு தேவைப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சேமித்து, சீராக வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.