;
Athirady Tamil News

சுகாதாரத்துறையை அழிக்க சதி !!

0

தற்போதைய அரசாங்கம், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்நாட்டின் சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் மற்றும் மருத்துவ சபை சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு திங்கட்கிழமை (21) நடத்திய கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தச் சட்டங்களில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாம் நம்பினாலும், இந்தச் சட்டங்களை முற்றாக நீக்குவது என்பது மருந்து மாபியாவுக்கு இடம் கொடுப்பதும், பல்வேறு பல்தேசிய மருந்துக் கம்பெனிகள் தலைமையிலான சர்வதேச நிறுவனங்களை நாட்டின் மருந்துக் கொள்கையை கையாள அனுமதிப்பதும்தான் என்றும் குறிப்பிட்டார்.

இந்நேரத்தில், சுகாதாரத் துறை ஒரு பேரழிவாக மாறியுள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களால் புத்திசாலிகள் வெளியேற்றம் போலவே மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

உயர்தரத்திலான மருந்துகளை நியாயமான மற்றும் மலிவு விலையில் வழங்குவதே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும், தற்போதைய அரசாங்கம் கட்டளைச்சட்டங்கள்,ஆணைகளை பயன்படுத்தி கொள்முதல் முறைகளை புறக்கணித்து, அமைச்சரினதும் செயலாளரினதும் ஆட்சியாளர்களினதும் விருப்பத்திற்கு ஏற்ப மருந்துத் தொழிலில் ஒரு நட்புவட்டார முதலாளித்துவத்தை உருவாக்கியுள்ளனர் என்றார்.

தனது நண்பர்களுக்கு மருந்துப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதியளித்து சந்தையில் வெளியிடுவதற்கும் அனுமதித்து இதன் மூலம் தரம் தாழ்ந்த மருந்து மாபியாவின் செயற்பாட்டை அனுமதித்ததாகவும் கூறினார்.

நாட்டில் இயங்கிவரும் மருந்துப்பொருள் மாபியாவை நிறுத்த வேண்டும் என்றும் இந்த ஊழல் முறைகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் இது பொதுச் சொத்துக்களையும்,மக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கும் செயலாகும் எனவும் தெரிவித்தார்.

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகளை ஒரே நேரத்தில் இறக்குமதி செய்து மக்களின் பணத்தை வீணடிக்கும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முறையான கணக்கெடுப்பு இல்லாமல் செயல்படுத்தப்பட்டதால் அஸ்வெசும திட்டம் தோல்வியடைந்ததாகவும், இதே முறையை சுகாதாரத்துறைக்கும் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்துறையையும் அழிக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சாமானியர்களின் உயிரைக் காப்பாற்றுவதா அல்லது மக்களை மரணப் படுக்கைக்கு இட்டுச் செல்லும் கொள்கைகளுக்காக முன் நிற்பதா என்பதை முடிவு செய்ய வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ கவுன்சில் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.