;
Athirady Tamil News

ஹாலிவுட் பட்ஜெட்டை விட குறைவாக சந்திராயன்-3 வெற்றிக்கு செலவிட்ட இந்தியா: வியக்கும் உலக நாடுகள்!!

0

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் ஏவிய சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நேற்று மாலை 06:04 மணியளவில் வெற்றிகரமாக அடைந்தது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு எனும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. ௨௦௧௯-ல் ஏற்பட்ட சந்திரயான்-2 தோல்வியில் இருந்து பல விஷயங்களை கற்று கொண்டதால்தான் சந்திராயன்-3 வெற்றி சாத்தியமானதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திராயன்-2 முயற்சிக்காக சுமார் ரூ.800 கோடி செலவானது. சந்திரயான்-3 திட்டத்திற்காக இதை விட குறைவாக இந்தியா சுமார் ரூ.620 கோடி ($75 மில்லியன்) செலவிட்டிருக்கிறது.

இந்த தொகை பல உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. 2013-இல் எடுக்கப்பட்ட சாண்ட்ரா புல்லக் நடித்த கிராவிடி (Gravity) திரைப்படத்தை தயாரிக்க சுமார் ரூ.825 கோடி ($100 மில்லியன்) செலவானது. 2015-இல் எடுக்கப்பட்ட மேட் டேமன் நடித்த தி மார்ஷியன் (The Martian) தயாரிக்க சுமார் ரூ.890 கோடி ($108 மில்லியன்) செலவானது. 2014-இல் எடுக்கப்பட்ட கிரிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) தயாரிக்க ரூ.1300 கோடி ($165 மில்லியன்) செலவானது. இது மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறையில், பிரிட்டனில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீட்டின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2000 கோடி (200 மில்லியன் பவுண்ட்).

இந்த ஒப்பீடுகளுடன், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்த பல முன்னணி ஆங்கில திரைப்படங்களை உருவாக்க ஆன செலவை விட குறைவான செலவில் இந்தியா ஒரு விண்வெளி சாதனையை எவ்வாறு நிகழ்த்தியது என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. மனித இனத்திற்கு பயனளிக்க கூடிய விண்வெளி திட்டங்களை சிக்கனமான வழிமுறைகளில் செயல்படுத்த போவதாக கூறியிருந்த இந்திய அரசாங்கம், தனியார் நிறுவனங்களும் விண்வெளி துறையில் ஈடுபட அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.