இந்திய மீனவர் வருகையை இராஜதந்திர ரீதியாகத் தடுக்க வலியுறுத்துகிறோம்: வடக்கு மாகாண மீனவர்கள் இணையம்
வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் சந்திப்புக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்தப் போராட்டம் வாயிலாக பல விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. இந்திய மீனவர்களின் வருகை தொடர்வதன் காரணமாக வடபகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களிலுமுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தரப்பும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை யாழ் மாவட்டம் முன்னெடுத்திருந்தது. அதனை நாங்களும் எதிர்பார்க்கின்றோம். போராட்டம் வரும் போது நாங்களும் பங்காளர்களாக இருப்போம்.
அதே நேரம் போராட்டத்தில் தலைமையை ஏற்றவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக வடக்கு மாகாண மீனவர் என்ற ரீதியில் அந்தப் போராட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை கேட்டிருந்தோம். இந்திய தூதரகம் தொடர்பாக கருத்துச் சொல்ல வந்த நபர் கூறிய கருத்து எங்களையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
வடக்கு மாகாண மீனவர்கள் இன்று கூட இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை. உண்மையிலேயே இலங்கையில் தற்போது இருக்கின்ற நிலையை பார்த்துக் கொண்டால் பொருளாதார நெருக்கடியிலும் சரி அனத்த வேளையிலும் சரி இன்று வரை முதலாவதாக இந்தியாவே பங்களிப்பு செய்து வருகிறது.
நிவாரணமோ உதவியோ உட்கட்டுமானங்களோ இந்தியாவே பங்களிக்கிறது. இலங்கையில் மீனவர்களுக்கு அப்பால் இருக்கின்ற மக்களின் தேவைகளை இங்கு இருக்கின்ற துணைத் தூதரகம் நிறைவேற்றி வருகிறது. ஒரு சில நபர்களின் சொந்த கருத்தை இவ்வாறான பெரியளவிலான போராட்டங்களின் போது பயன்படுத்துவது நாங்கள் விரும்பவில்லை. இதை வட பகுதி மீனவர்களின் கருத்தாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை இவ்வேளை தெரிவிக்கிறோம்.
வடபகுதி மீனவர்கள் இந்திய அரசை நம்பியே இருக்கிறோம். இந்திய மீனவர்களின் வருகையை தடுக்க வேண்டும் என்றால் அதை தூதரக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தடுக்க முடியும் என நாம் திடமாக நம்புகிறோம். அரசாங்கம் ஊடாக இதையே நாம் கூறி வருகிறோம். இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் முழுமையான செயற்பாட்டை முன்னெடுக்குமாக இருந்தால் இவ்வாறான போராட்டமும் தேவையில்லை.
இந்தியாவை நம்பி வடக்கு மாகாண முன்னேற நிறைய தேவை இருக்கிறது. அந்த முன்னேற்றத்தின் பங்காளியாக இந்தியா இருக்க வேண்டும் என இங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள். எனவே அந்தக் கருத்தை மறுதலித்து அந்த கருத்தை நிச்சயமாக எதிர்காலத்தில் அவ்வாறு பேசக்கூடாது. போராட்டத்தை முன்னெடுக்கும் தரப்புகள் இதனை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் – என்றனர்.