;
Athirady Tamil News

ஓட்டலில் திடீர் சண்டை.. காதலியை கொன்றவருக்கு 60 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது பே டவுன் பகுதி. இங்குள்ள ஒரு ஓட்டலிற்கு 35 வயதான டான்ட்ரேவியாஸ் ஜமால் மெக்நெய்ல் மற்றும் 47 வயதான கேட்டி ஹவுக் வந்தனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவருக்குமிடையே ஏதோ சில காரணங்களுக்காக வாக்குவாதம் தொடங்கி அது சண்டையாக மாறியது. இந்த சண்டையின் போது கோபமடைந்த மெக்நெய்ல், கேட்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அதில் 2 கத்திக்குத்துகள் கேட்டியின் இதய பகுதியை தாக்கியது. உள்ளே நடைபெறும் சண்டையை அறிந்து கொண்ட ஓட்டல் நிர்வாகிகள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைவாக வந்து உள்ளே சென்று பார்த்த போது கேட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அங்கு மெக்நெய்ல் பயன்படுத்திய கத்தி அருகில் இருந்தது. அருகிலேயே மெக்நெய்ல் கடுங்கோபத்தில் நின்றிருந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கேட்டி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 27 முறை கத்திக்குத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மெக்நெய்ல் கைது செய்யப்பட்டு ஹாரிஸ் கவுன்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மெக்நெய்ல் மீது ஏற்கெனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருந்தன.

வழக்கு விசாரணையின் போது, கேட்டியை கொன்றதாக ஒப்பு கொண்ட மெக்நெய்ல் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவர் மீது தயவு காட்ட மறுத்த நீதிபதி, அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஒரு பொறுப்புள்ள தாயாக வாழ்ந்தவர் மீது எந்தவித சிந்தனையுமின்றி கொடூரமான தாக்குதல் நடத்தி அவரை கொன்றவருக்கு இது சரியான தண்டனை என இந்த தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.