;
Athirady Tamil News

பியூ ஆய்வு: “80 சதவீத இந்தியர்கள் மோதி குறித்து நேர்மறையான கருத்து” !!

0

இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த மாநாடு தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோதியின் பிரபலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரதமர் மோதி எந்த அளவு பிரபலமாக உள்ளார் என்பது குறித்தும், உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு பற்றியும் உலகின் பல்வேறு நாடுகளில் அண்மையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பியூ ஆய்வு மையம்’ நடத்திய இந்த ஆய்வில், இந்தியர்களில் சுமார் 80 சதவீதம் பேர், இந்திய பிரதமர் மோதி குறித்து நேர்மறையான கருத்துகளை கொண்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

சுருக்கமாக சொன்னால், இந்த ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 10 இல் 8 பேரின் முதல் தெரிவு பிரதமர் மோதியாக இருக்கிறார்.

குறிப்பாக இவர்களில் 55 சதவீதம் பேரின் முதல் தெரிவு மோதியாக உள்ளார் எனவும், அவர்கள் அவரை அதிகம் விரும்புகின்றனர் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இந்தியர்களில் 20 சதவீதம் பேர் மோதியை விரும்பவில்லை அல்லது அவர்களின் முதல் தெரிவாக மோதி இல்லை என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.

இந்தியாவுக்கு வெளியே, பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மோதியை எப்படி பார்க்கின்றனர்? மோதி மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளதா, இல்லையா என்பன உள்ளிட்ட கேள்விகளும் இந்த கருத்துக்கணிப்பில் முன்வைக்கப்பட்டன.

12 நாடுகளைச் சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள், இந்த கேள்விகளுக்கு மாறுபட்ட கருத்துகளை கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களில் 40 சதவீதம் பேர், சர்வதேச விவகாரங்களில் மோதியின் திறமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 37 சதவீதம் பேர், மோதி மீது தங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.

குறிப்பாக, பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மோதியின் அணுகுமுறைகளை விமர்சிப்பவர்களாக உள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வெளியுறவு கொள்கை சார்ந்த மோதியின் முடிவுகளை தாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, இந்த கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த குடிமக்களில் 37 சதவீதம் பேர் மோதியை விரும்பவில்லை என்றும், 21 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

அமெரிக்க மக்களில் 42 சதவீதம் பேர் மோதி குறித்து அறிந்திருக்கவில்லை அல்லது இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

ஆனால், அதேசமயம் ஜப்பான், கென்யா மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த மக்கள், மோதியின் திறமைகள் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, கென்யாவின் 60 சதவீத மக்கள், சர்வதேச விவகாரங்களில் மோதியின் அணுகுமுறை மற்றும் அவரது முடிவெடுக்கும் திறனில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, ஜப்பான் குடிமக்களில் 45 சதவீதம் பேர், மோதி சரியான விஷயங்களை தான் செய்வார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், 37 சதவீதம் ஜப்பானியர்கள் தாங்கள் அவ்வாறு எண்ணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலை சேர்ந்த 41 சதவீதம் பேரும், ஆஸ்திரேலிய குடிமக்களில் 42 சதவீதம் பேரும் மோதி மீதான தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். மோதி குறித்த இந்தோனீசியா, தென்கொரியாவை சேர்ந்த மக்களின் பார்வையும் நேர்மறையாகவே உள்ளது.

இந்த ஆய்வின் பெரும்பாலான முடிவுகள், பிரதமர் மோதிக்கும், பாஜகவுக்கும் சாதகமாகவே உள்ளன.

இந்த ஆய்வின் பெரும்பாலான முடிவுகள், பிரதமர் மோதிக்கும், பாஜகவுக்கும் சாதகமாகவே உள்ளன.

இருப்பினும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசுவதாக தெரியவில்லை.

இதேபோன்று, பாஜகவின் எந்தவொரு அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த ஆய்வு முடிவுகள் பகிரப்படவில்லை.

இதுகுறித்து, பாஜகவின் செய்தி தொடர்பாளர் அமிதாப் சின்ஹாவை பிபிசி தொடர்பு கொண்டு கேட்டது. அப்போது அவர், “இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் மோதியின் புகழ் பரவியுள்ளது. இது நாட்டின் பொதுவான மனநிலை. அவருக்கு இணையாக எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இல்லை.

பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து ‘இந்தியா’ எனும் கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன” என்று அமிதாப் சின்ஹா விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “எதிர்க்கட்சிகளில் பிரதமர் மோதிக்கு நிகரான முகம் இல்லாதபோது, அவர் மீதான மக்கள் செல்வாக்கை சந்தேகிக்கும் கேள்விக்கே இடமில்லை.

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நிறைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. இந்த கருத்துக்கணிப்பை பொருத்தவரை இதில் குறிப்பிட்டப்பட்டுள்ள விஷயங்கள் மிகவும் தீவிரமானவை” என்றும் அவர் கூறினார்.

“அதேசமயம் இதுபோன்ற கருத்துக்கணிப்புகளின் நம்பத்தன்மை எப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளன. பிரதமர் மோதியின் புகழ் ஏற்கனவே ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஒரு கணக்கெடுப்பின் மூலம் அவரது புகழை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்றும் அமிதாப் தெரிவித்தார்.

பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின்படி, அரசியல் தலைவர்களில் இந்தியர்களின் இரண்டாவது தெரிவாக ராகுல் காந்தி திகழ்கிறார்.

அதாவது 10இல் ஆறு இந்தியர்கள், ராகுல் காந்தி குறித்து நேர்மறையான கருத்துகளை கொண்டுள்ளனர். அதேசமயம் 46 சதவீதம் பேர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்தும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஆறு நாடுகள் குறித்து இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

மோதி, ராகுல் என்று தலைவர்களை போல், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்த பல்வேறு தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளன.

அதன்படி, உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக 68 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 10இல் ஏழு இந்தியர்கள், தங்களது நாடு உலக அளவில் சமீபத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளதாக நம்புகின்றனர்.

பிற நாடுகளின் மக்களை பொருத்தவரை, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியா குறித்து நேர்மையான அணுகுமுறையை கொண்டுள்ளனர்.

பிரிட்டன், கென்யா மற்றும் நைஜீரியாவை சேர்ந்த மக்களும் இந்தியாவைப் பற்றி நல்ல கருத்தே கொண்டுள்ளனர். இந்த நாடுகளை சேர்ந்த 10 இல் ஆறு பேர் இந்தியா குறித்து நேர்மறை எண்ணத்தை கொண்டவர்களாகவே உள்ளனர்.

ஆனால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குடிமக்களில் பெரும்பாலோர் இந்தியாவைப் பற்றி விமர்சன பார்வை கொண்டவர்களாக உள்ளனர்.

இந்நாட்டை சேர்ந்த 28 பேர் மட்டுமே இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த மக்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோரின் இந்தியா பற்றிய பார்வை நேர்மறையாகவே உள்ளது. பிரிட்டனை பொருத்தவரை, அங்குள்ள மக்களில் 66 சதவீதம் பேர் இந்தியாவை விரும்புகின்றனர்.

ஆனால், ஒட்டுமொத்த ஐரோப்பாவை பொருத்தவரை, 2008 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது. இந்தியா மீதான இந்நாடுகளைச் சேர்ந்த மக்களின் பார்வை தற்போது எதிர்மறையாக மாறியுள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்தியாவை பற்றிய பிற நாட்டு மக்களின் பார்வையை போன்று, பிற நாடுகள் குறித்த இந்திய மக்களின் எண்ணமும் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஆறு நாடுகள் குறித்து இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் வெளியான முடிவுகளின்படி, உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கிட்டத்தட்ட 50 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்துள்ளதாக 14 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர்.

இதேபோன்று, உலக அளவில் ரஷ்யாவின் செல்வாக்கு வலுப்பெற்றுள்ளது என்று தாங்கள் நம்புவதாக பெரும்பலான இநதியர்கள் கூறியுள்ளனர்.

அதேநேரம், சீனா குறித்து பெரும்பாலான இந்தியர்கள் எதிர்மறை கருத்தையே கொண்டுள்ளனர். 68 சதவீத இந்தியர்கள் சீனாவைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் 48 சதவீதம் இந்தியர்களுக்கு. சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.

பெண்களை விட இந்திய ஆண்கள் தான் பாகிஸ்தானை அதிகம் வெறுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியின் வாக்காளர்களாக உள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 10 இந்தியர்களில் ஏழு பேர் பாகிஸ்தான் மீது எதிர்மறையான கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் 19 சதவீதம் பேர் பாகிஸ்தான் பற்றி நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர்.

பெண்களை விட இந்திய ஆண்கள் தான் பாகிஸ்தானை அதிகம் வெறுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணியின் வாக்காளர்களாக உள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் மீதான இந்தியரகளின் வெறுப்பு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா- பசிபிக் பகுதி, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைத் தொடர்பு கொண்டு விரிவாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தியர்களும், உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்தும், உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிரதானமாக கொண்டு இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019க்கு பிறகு. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள், இந்த ஆண்டு தான் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவை பொருத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட மொத்தம் 2,611 பேரிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே மாதம் 11 ஆம் தேதி வரை, குறிப்பிட்ட நபர்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் மார்ச் 20 முதல் 26 ஆம் தேதி வரை, மொத்தம் 3,576 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே 11 நாடுகளின் குடிமக்களிடம் தொலைபேசி மூலமும், 10 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் நேரடியாகவும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய மக்களிடம் ஆன்லைன் மூலமும், நேருக்கு நேராகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சமூகப் பிரச்னைகள் மற்றும் உலக மக்களின் போக்குகள் பற்றிய தகவல்களை வழங்கும் ஓர் அமெரிக்க சிந்தனைக் குழுவாக பியூ ஆய்வு மையம் திகழ்கிறது. கடந்த காலங்களிலும் இந்த அமைப்பு நடத்திய ஆய்வுகள் மற்றும் அதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள், உலக அரங்கில் பேசுபொருளாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.