;
Athirady Tamil News

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம் சீனாவுக்கு சவால் விடுகிறதா?

0

அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ‘இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை’ பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளின் தலைவர்கள் இதை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர்.

இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அதிக செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தம் இது என்று அவர் தெரிவித்தார்.

‘வர்த்தகத்தை துரிதப்படுத்தும் நேரடிப் பாதையாக இது இருக்கும்’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்ஸுலா வோன் டேர் லேயன் கூறியுள்ளார்.

அமெரிக்கா, வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து மிகப்பெரிய, லட்சியபூர்வமான உள்கட்டமைப்பு திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை ரயில் மற்றும் துறைமுக நெட்வொர்க் மூலம் இணைப்பது, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகள் ரயில் வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு, பின்னர் அவை கப்பல் பாதை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதன் பிறகு இந்த நெட்வொர்க் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும்.

செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

“இது வெறும் ஒரு ரயில் திட்டம் மட்டுமல்ல. இது கப்பல் மற்றும் ரயில் திட்டம். இந்தத் திட்டம் எவ்வளவு மதிப்புமிக்கது, லட்சியபூர்வமானது, முன்னோடியானது என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

“இந்த ஒப்பந்தம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்குப் பயனளிக்கும். உலக வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கியப் பங்கு வகிப்பதற்கு இது உதவும்,” என்று அவர் கூறினார்.

இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஓர் உள்கட்டமைப்பு திட்டமாகும்.

இதன் கீழ் துறைமுகங்கள் முதல் ரயில் பாதை இணைப்புகள் வரை எல்லாமே கட்டப்பட உள்ளது. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் ரயில் பாதைத் தொடர்பு மிகவும் விரிவானது.

ஆனால் மத்திய கிழக்கைப் பார்த்தால் அங்குள்ள ரயில் பாதைகள் ஒப்பீட்டளவில் விரிவாக இல்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பெருமளவில் சாலை அல்லது கடல் வழியாகவே செய்யப்படுகிறது.

ரயில்வே பாதைகள் இணைக்கப்பட்டால், மத்திய கிழக்கின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு சரக்குகளைக் கொண்டு செல்வது எளிதாகும்.

இதனுடன் கூடவே இந்தத் திட்டத்தால் உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய கப்பல் போக்குவரத்து வழியையும் வழங்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியா அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை அடைகின்றன. இதன் பிறகு அவை ஐரோப்பிய நாடுகளை சென்றடைகிறது.

இதனுடன், அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்குச் செல்லும் பொருட்கள் மத்தியதரைக் கடல் வழியாக அட்லான்டிக் பெருங்கடலில் நுழைந்து, பின்னர் அது அமெரிக்கா, கனடா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளை அடைகிறது.

​​“தற்போது மும்பையில் இருந்து ஐரோப்பாவுக்கு புறப்படும் கண்டெய்னர்கள் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை அடைகின்றன. எதிர்காலத்தில் இவை துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயிலில் செல்ல முடியும்.

இதற்குப் பிறகு அவை ஐரோப்பாவை சென்றடையும். இதனால் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்,” என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய நிபுணர் பிரமீத் பால் செளத்ரி கூறினார்.

தற்போது சர்வதேச வர்த்தகத்தின் 10 சதவீதம் சூயஸ் கால்வாயை நம்பியுள்ளது. இங்கு ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும்கூட சர்வதேச வர்த்தகத்திற்கு அது பெரும் சவாலாக உள்ளது.

‘எவர் கிவன்’ என்ற பெரிய சரக்குக் கப்பல், 2021ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயில் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இந்தச் சம்பவம் சர்வதேச வர்த்தகத்திற்கு நெருக்கடியை உருவாக்கியது. இந்தப் பிராந்தியத்தின் வழியாகச் செல்லும் சரக்குகளை ஒரு வார காலத்திற்கு இது தாமதப்படுத்தியது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடலுக்கு அடியில் ஒரு கேபிள் போடப்படும். அது இந்தப் பகுதிகளை இணைத்து, தொலைத்தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை விரைவுபடுத்தும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை இது கொடுக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று சர்வதேச வர்த்தக நிபுணர் டாக்டர் பிரபீர் டே கருதுகிறார்.

“இந்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை வழங்கும். சூயஸ் கால்வாய் வழியை நாம் சார்ந்திருப்பதை இது குறைக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் அந்த வழித்தடத்தில் எப்போதாவது ஏதேனும் சிக்கல் எழுந்தால், அது சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்காது. ஏனெனில் மாற்று வழி இருக்கும்.

இதனுடன், செளதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரயில் பாதைகள் சரியாக இல்லை. இந்தப் பாதை அமைக்கப்பட்டால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கொண்டு வருவது நமக்கு எளிதாகிவிடும்,” என்று டாக்டர் டே கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது சாதகமானதாக இருக்கும் என்று சர்வதேச உறவுகள் நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான டாக்டர் ஸ்வரன் சிங் கருதுகிறார்.

“மத்திய கிழக்கு நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் நிறுவப்படுவதன் மூலம், இந்த நாடுகளில் நிலைமை மேம்படும். ஒருபுறம், உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மறுபுறம், இது மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டு வரும். ஏனெனில் ரயில்பாதை இணைப்புகள் வணிகரீதியாக நாடுகளை நெருக்கமாக்குகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஏதோவொரு விபரீத சூழல் ஏற்பட்டால், இரண்டு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்த முடியும். ரயில்வே வழித்தடத்தில் இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இது பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று புரிந்து நடந்துகொள்ளும்,” என்று டாக்டர். ஸ்வரன் சிங் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால், இந்தப் பாதையின் வரவு இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வளவு ஊக்கமளிக்கும் என்பதை இப்போது மதிப்பிடுவது கடினம் எனக் கருதுகிறார் பிரபீர் டே.

“ஏனெனில் வணிகத்தின் வளர்ச்சி என்பது தூரத்தைக் குறைப்பதால் மட்டுமே ஏற்பட்டுவிடாது. இதற்கு வேறு பல காரணிகளும் உள்ளன,” என்றார் அவர்.

இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜான் ஃபைனர், ”இந்த ஒப்பந்தம் தொடர்பாக உலகம் முழுவதிலும் நேர்மறையான கருத்துகள் வெளியாகும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இதுதொடர்பாக நேர்மறையான அணுகுமுறை இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை முறியடிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார்.

ஜி20 குழுவிற்கு உள்ளே அவர் அமெரிக்காவை, வளரும் நாடுகளுக்கான மாற்று பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் முன்வைக்கிறார்.

பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் சீனா தனது செல்வாக்கு, முதலீடு மற்றும் வர்த்தகத்தை ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரையிலும், ஆசியாவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரையிலும் விரிவுபடுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம், சீனாவின் லட்சிய திட்டமான பிஆர்ஐ-க்கு வலுவான பதிலடி என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான தி வில்சன் மையத்தின் தெற்காசிய அமைப்பின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கருதுகிறார்.

“இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், அது இந்தியாவை மத்திய கிழக்குடன் இணைக்கும். பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு சவாலாக விளங்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்,” என்று குகல்மேன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்

இந்த ஒப்பந்தத்தின் அறிவிப்பு தொடர்பான செய்திக்குப் பிறகு சீன செய்தித்தாள் குளோபல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முயற்சிகள் போதுமானது அல்ல என்று விவரிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை 2008இல் தொடங்கியது. மேலும் இதன் கீழ் பல நாடுகளில் பணிகள் நடந்து வருகின்றன.

அதேநேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான இந்தத் திட்டம் 2023இல் தொடங்குகிறது.

அத்தகைய சூழ்நிலையில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்த்தைக் காட்டிலும் வலுவான மாற்றுவழி இது என்று சொல்ல முடியுமா?

பிஆர்ஐயுடன் ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் எங்கும் இல்லை என்று சொல்வது சரியானதுதான். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், இந்தத் திட்டம் உலகிற்கு சாதகமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக டாகடர் ஸ்வரன் சிங் கூறினார்.

ஏனெனில், “அதன் நோக்கம் பிஆர்ஐ-இல் காணப்படுவதைப் போல எந்தவொரு அரசு அல்லது கட்சியின் செல்வாக்கை உலகம் முழுவதும் பரப்புவது அல்ல,” என்று டாக்டர் ஸ்வரன் சிங் சுட்டிக்காட்டினார்.

“இதன் நோக்கம், விதிகள் அடிப்படையிலான, உலகளாவிய ஒழுங்குமுறைக்கு ஏற்ப, ஒரு கட்டமைப்பை உருவாக்குவது. அதன்மீது எதிர்கால வர்த்தகம் கட்டமைக்கப்படும்.

ஏனென்றால் பிஆர்ஐ திட்டங்கள் எங்கு அமல் செய்யப்படுகின்றனவோ அந்த நாடுகளில் சில காலத்திற்குப் பிறகு சீனா பற்றிய எதிர்மறையான கருத்துகள் உருவாவதைப் பார்க்க முடிகிறது. ஏனெனில் சீனாவின் நோக்கம் அந்த நாடுகளின் வளர்ச்சி அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.