;
Athirady Tamil News

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் விவகாரம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிபரிடம் ஜீவன் வலியுறுத்து!

0

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் காவல் தலைமையகத்திலும் அமைச்சர் முறைப்பாடொன்றினை முன்வைத்துள்ளார்.

விசாரணை
அதேபோல குறித்த தேரரின் கடந்தகால செயற்பாடுகள் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதால் அது தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபருக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், தனக்கும் அறிக்கையொன்றை வழங்குமாறும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களை இலக்கு வைத்து அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் இனக்குரோதத்தை விதைக்கும் வகையில் உள்ளதுடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் எமது நாட்டு பொருளாதாரம் சரிந்தது, அதன்பின்னர் அரசியல் குழப்பத்தால் அதல பாதாளத்திலேயே விழுந்தது.

எனவே, அனைவரும் இணைந்து செயற்பட்டால்தான் இந்நாட்டை கட்டியெழுப்பலாம். நாட்டில் முன்னேற்றத்துக்கு இன, மத நல்லிணக்கம் மிக முக்கியம்.

இந்நிலையில் இனவாதம் கக்கி, இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் குறித்த தேரர் செயற்பட்டு வருகின்றார்.

கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அவர் சட்டத்தை கையில் எடுத்துசெயற்பட முற்படுகின்றார். எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.