;
Athirady Tamil News

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கிடையாது.. குற்றவாளிகள் மனு தள்ளுபடி

0

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி 5 போ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகன் திருமணம், நிலப்பிரச்னை, உடல்நிலை என குற்றவாளிகள் குறிப்பிடும் காரணங்களை நியாயப்படுத்த எந்த தகுதியும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ‘குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில், சரணடைய கால அவகாசம் கோரிய குற்றவாளிகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, 21 வயது முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும், அவரின் குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனா். இதையடுத்து, அவா்களின் தண்டனைக் குறைப்பு மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் அரசின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனா்.

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்பட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், வழக்கின் குற்றவாளிகள் 11 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனா்.

வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் 2 வாரங்களுக்குள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். குற்றவாளிகள் சிறைக்குத் திரும்புவதற்கான அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், 11 குற்றவாளிகளில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி விபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோா்தியா, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா, கோவிந்த் ஆகிய 5 போ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். கூடுதல் அவகாச கோரிக்கைக்கு உடல்நலப் பிரச்னை, வேளாண் நிலப் பராமரிப்பு, மகன் திருமணம் ஆகிய காரணங்களை குற்றவாளிகள் மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.