;
Athirady Tamil News

யாழில். கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்

0

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில்,வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

அந்தவகையில், கடந்த ஐந்து வருடங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள், தரம் ஐந்து, சாதாரண மற்றும் உயர் தரங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துளசேன விடயங்களை தெளிவுப்படுத்தினார்.

அதிபர்கள் நியமனத்தில் எழுந்த சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றங்களில் காணப்படும் சிக்கல்கள், தளபாட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன் போது தெளிவுப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.