அவுஸ்திரேலியாவில் சிறுவர், சிறுமியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் eSafety ஆணையரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அவுஸ்திரேலிய இளைஞர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.4 மணிநேரங்களை ஒன்லைனில் செலவிடுகிறார்கள் மற்றும் சராசரியாக நான்கு வெவ்வேறு சமூக ஊடக சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், மாநில அரசாங்கத்தின் முன்மொழிவின்படி, தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்குட்பட்டவர்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
மேலும், 14 மற்றும் 15 வயதுடையவர்கள் கணக்கை அணுக பெற்றோரின் ஒப்புதல் தேவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் முதல் சமூக ஊடக வயதுத் தடையை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை ஆராய, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்சை மாநில அரசாங்கம் நியமித்துள்ளதாக பீட்டர் மலினஸ்கஸ் அறிவித்தார்.
அத்துடன் சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாக பெருகிய சான்றுகள் இருப்பதாக கூறினார்.
மேலும் அவர், ”எங்கள் குழந்தைகள் இப்போது பாதிக்கப்படுகிறார்கள், நேரத்தை வீணடிக்க முடியாது. நான் வேறொருவருக்காகக் காத்திருக்க விரும்பவில்லை, வழிநடத்துவோம். 18 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்கள் ஒன்லைன் சூதாட்டத்தை அணுகுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றலாம்” என தெரிவித்துள்ளார்.