;
Athirady Tamil News

மூடப்படுகிறதா சென்னை பல்கலைக்கழகம்? அப்படி என்ன தான் பிரச்னை?

0

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு தாய். 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள், நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான முத்துக்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். இவ்வளவு பெருமைகளைக் கொண்ட சென்னை பல்கலைக்கழகம்-தான் தற்போது நிதி சிக்கல்களிலும், நிர்வாக குறைபாடுகளாலும் சிக்கித் தவிக்கிறது.

துணை வேந்தர் ஓய்வுபெற்று 6 மாதங்களாகிவிட்டன. புதிய துணை வேந்தர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருப்பதால், பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர்களே கூறுகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டக் கல்லூரிகளை நிர்வகிக்கும் இப்பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் தர வேண்டிய சிண்டிகேட் குழுக் கூட்டம் நடந்து 7 மாதங்களாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை நடப்பதே வழக்கம். புதிய சிண்டிகேட் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக சுயநிதிக் கல்லூரி பிரநிதிகளை அனுமதிக்காததால், 133 கல்லூரிகளில் 115 கல்லூரிகள் அத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 5 செமஸ்டர்களுக்கான மதிப்பெண் சான்றிதழே மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதால், உயர்கல்வி பயில முடியவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர் மாணவர்கள். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு அன்றைய நாளே ஊதியம் வழங்கப்படும் நிலையில், 2022ஆம் ஆண்டிலிருந்து அந்த ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக பேராசிரியர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிதி பற்றாக்குறையால் பல்கலைக்கழகம் சந்திக்கும் சிக்கல்களின் பட்டியல் மிக நீளம். தொலைநிலைக் கல்வியில் கடந்த ஜூன் மாதத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னமும் புத்தகம் வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர் மாணவர்கள். அரசு தரும் நிதிக்கான தணிக்கை வழங்கப்படாததால், நாளுக்கு நாள் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைந்துள்ளது. இதனால், பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே தவித்து வருகிறது பல்கலைக்கழகம் என்கின்றனர் பேராசிரியர்கள்.

முறையான பதில் அளிக்காததால், அண்மையில் வருமான வரித்துறை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை முடக்கியது. இப்படி நிதி சிக்கல், நிர்வாகக் குளறுபடி என பலவற்றால் சிதைவுண்டு கிடக்கிறது தமிழ்நாட்டின் பழமையான சென்னை பல்கலைக்கழகம். போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சென்னை பல்கலைக்கழகத்தை மீட்டெடுத்து மாணவர்களின் நலனைக் காக்க வேண்டியது உடனடி அவசியம் என வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.