;
Athirady Tamil News

புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம் -காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்

0

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊா்வலத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி மாயமான நிலையில், அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் 5-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாரின் விசாரணையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, கழிவுநீா் கால்வாயில் வீசியது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் அவரது வீட்டில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை மாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புதுவை டிஜிபி ஸ்ரீநிவாஸ், விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா் உள்ளிட்டோா் சிறுமியின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, வைத்திக்குப்பம் பாப்பம்மாள் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் பாடப்புத்தகங்கள், புத்தகப் பை, பொம்மைகளை சிறுமியின் உடலுடன் வைத்து அடக்கம் நடைபெற்றது. இறுதி ஊா்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கைதான இருவா் சிறையில் அடைப்பு: சிறுமி கொலை வழக்கில் கைதான விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் மீது போக்ஸோ, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்கள் இருவரையும் புதுச்சேரி நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் மாஜிஸ்திரேட் முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்த போலீஸாா் முடிவு செய்தனா். இதையறிந்த பொதுமக்கள், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் குவிந்தனா். சிறுமி கொலை வழக்கில் கைதானவா்களுக்கு வாதிட மாட்டோம் என புதுச்சேரி வழக்குரைஞா்கள் தெரிவித்த நிலையில், நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தும் போது அசம்பாதவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.

கைதான இருவரையும் முத்தியால்பேட்டை போலீஸாா் காலாப்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

சிறப்புக் குழு விசாரணை தீவிரம்: இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா எனக் கண்டறிந்து விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா். சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட இடம், அவரை அடைத்து வைத்ததாகக் கூறப்படும் மாட்டுக் கொட்டகை அருகேயுள்ள வீடு ஆகியவற்றில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு செய்தனா். புதுவை டிஜிபியும் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: இதற்கிடையில், முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ஏ. தனசெல்வம், உதவி ஆய்வாளா் வி.ஜெயகுருநாதன் ஆகியோா் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆயுதப் படை பிரிவு ஆய்வாளா் ஏ.கண்ணன் முத்தியால்பேட்டை ஆய்வாளராகவும், அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பி.சிவப்பிரகாசம் முத்தியால்பேட்டை உதவி ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டனா். புதுச்சேரி அரசு குடியிருப்புப் பகுதி புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜி.கதிரேசன் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய 11 காவலா்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.