;
Athirady Tamil News

பாதாள உலகத்தை அழிக்க தயார் நிலையில் படையணிகள் : முடுக்கிவிடப்படவுள்ள நடவடிக்கை

0

காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில், அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கும் பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (18ஆம் திகதி) முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பிரதேசங்களில் செயற்படும் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதற்காக காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் 20 ஆயுதமேந்திய தாக்குதல் காவல்துறை படையணிகள் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளன.

நேரடி கண்காணிப்பில் தாக்குதல் படைப்பிரிவுகள்
இந்த தாக்குதல் படைப்பிரிவுகள் காவல்துறை மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் உத்தரவின் பேரில் மாத்திரம் செயற்படுவதுடன் அடையாளங்காணப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களை அழிப்பதற்கு முழு நேரமும் செயற்படவுள்ளன.

குற்றச் செயல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள சில காவல் நிலையத் தளபதிகள் பாதாள உலகக் குழுக்களுக்கு அஞ்சுவதும் வேறு சிலர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை பேணுவதும்தான் பாதாள உலகக் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர்,கடும் எச்சரிக்கை
இதன்படி, பாதாள உலகத்தை அடக்கத் தவறிய 62 பிரதேசங்களின் நிலையத் தளபதிகளுக்கு எதிராக காவல்துறை மா அதிபர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, 62 அதிகாரிகளையும் கொழும்புக்கு வரவழைத்த காவல்துறை மா அதிபர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இனிமேல் அந்தப் பகுதிகளில் பாதாள உலகக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், நிலையத் தளபதிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு,அவர்கள் சாதாரண கடமைகளுடன் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

பாதாள உலக குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வரும் தென் மாகாணத்தில் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஷ் சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் தென் மாகாணத்தில் இருந்து சுமார் 10 பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் நிலைய கட்டளைத் தளபதிகளை நீக்குவதற்கு காவல்துறை மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.