பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனியுடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை

ஈரான், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஈரான், அதன் அணுஆயுத திட்டத்தைச் சுற்றியுள்ள சர்வதேச அதிருப்திகளை தீர்க்கும் நோக்கில், இந்த வார வெள்ளிக்கிழமை ரோம் நகரத்தில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி (E3 நாடுகள்) ஆகியவற்றுடன் முக்கிய அணு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
இந்த தகவலை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியான பிறகு, இரான் அதன் அணு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
தற்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இந்த வார முடிவில் இத்தாலியில் நடைபெறவுள்ளது.
“E3 நாடுகள் தவறான கொள்கைகளைத் தொடர்ந்து அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் பங்கு இழந்துவிட்டன. ஆனால், எங்கள் நோக்கம் உரையாடலை முன்னெடுத்துச் செல்வதே,” என்று அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேநேரத்தில், அமெரிக்க நிதித்துறை, இஸ்லாமிக் ரிவலூஷனரி கார்டுக்காக ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனப் பொருட்கள் வாங்கியதாகக் கூறப்படும் ஈராக் மற்றும் சீனாவிலுள்ள நிறுவனங்களிற்கு புதிய பொருளாதார தண்டனைகளை விதித்துள்ளது.
பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன்-நொயல் பாரோ, “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், புதிய தடைகளை விதிக்க தயங்கமாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
“உலகளாவிய தீர்வை நாடும் நாடுகள், அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்.” என ஈரான் கூறியுள்ளது.