;
Athirady Tamil News

கணவரின் காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியம்: விவாகரத்து கோரிய மனைவி!

0

காபி கோப்பை குறித்து சாட்ஜிபிடி சொன்ன ரகசியத்தால் தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டுள்ளனர்.

விவாகரத்துக்கு வித்திட்ட சாட்ஜிபிடி
கிரீஸ் நாட்டில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள பெண் ஒருவர், தனது கணவரின் காபி கோப்பையில் இருந்த தூள்களை செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டான சாட்ஜிபிடி (ChatGPT) மூலம் ஆராய்ந்து, அது தனது கணவரின் கள்ளக்காதலை வெளிப்படுத்தியதாக நம்பி விவாகரத்து கோரியுள்ளார்.

கிரீக் சிட்டி டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, பத்தாண்டுகளுக்கும் மேலாக திருமண வாழ்க்கையை வாழ்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண், எதிர்காலத்தை அறியும் பழங்கால முறையான காபித்தூள் ஜோதிடம் (Tasseography) முறையை டிஜிட்டல் வடிவில் பயன்படுத்த முடிவு செய்தார்.

இதற்காக, அவர் தனது மற்றும் தனது கணவரின் காலி காபி கோப்பைகளின் புகைப்படங்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி, அதில் இருந்த தூள்களின் அமைப்பை விளக்கக் கோரினார்.

அப்போது, சாட்ஜிபிடி அளித்த பதில் அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சியளித்தது.

அந்த AI சாட்போட், அவரது கணவர் ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்தப் பெண் அவர்களின் குடும்பத்தைப் பிரிக்க முயற்சிப்பதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

மேலும், அவரது கணவரின் காபி கோப்பையில் “E” என்ற முதல் எழுத்தைக் கொண்ட ஒரு மர்மமான பெண்ணுடன் அவர் “விதிக்கப்பட்டவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதே நேரத்தில் அவரது கோப்பையில் துரோகம் மற்றும் குடும்பத்திற்கு ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுகளை மறுத்த கணவர்

உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோன்றிய சம்பந்தப்பட்ட கணவர், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய்யென மறுத்தார். தனது மனைவி வைரல் டிரெண்டுகளைப் பின்பற்றுபவர் என்றும், ஆனால் இந்த முறை அது விபரீதமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் முதலில் அதை முட்டாள்தனம் என்று நினைத்தேன், ஆனால் அவள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டாள். அவள் என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னாள், எங்கள் குழந்தைகளிடம் நாங்கள் விவாகரத்து செய்யப் போவதாகச் சொன்னாள், பின்னர் எனக்கு ஒரு வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதுதான் இது வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதை நான் உணர்ந்தேன்.” என தெரிவித்துள்ளார்.

பரஸ்பர பிரிவினைக்கு அவர் சம்மதிக்காத நிலையில், அந்தப் பெண் மூன்று நாட்களுக்குள் தனது கணவருக்கு முறைப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த வினோதமான சம்பவம், தொழில்நுட்பம், தனிப்பட்ட உறவுகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற தகவல்களின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை ஆகியவற்றின் கலவையை எடுத்துக்காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.