ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களூரிலுள்ள சின்னசாமி திடலில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது தலைமையில் நேற்று (ஜூன் 4) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அம்மாநில சட்டப்பேரவையிலிருந்து துவங்கி சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியும் நடைபெற்றது.
இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலின் அருகில் திரண்டனர். இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பெரும்பாலானோர் இளைஞர்கள் எனக் கூறப்படும் நிலையில்; பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.