;
Athirady Tamil News

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 7 மனுக்கள் தாக்கல்

0

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை பசுமை அமைப்பு உள்ளிட்ட ஏழு தரப்பினர் சமர்ப்பித்துள்ளனர்.

இம்மனுக்கள் நேற்று (06) நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவர் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அன்றைய தினம், இம்மனுக்கள் நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவர் அமர்வு முன்பு விசாரிக்கப்படவுள்ளன.

இலங்கை மின்சார சபையைத் தனியார்மயமாக்குவதற்கு இந்த சட்டமூலம் முன்மொழிகிறது என மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்களின் சேவைகளை இழப்பீட்டுடன் நிறுத்துவது தொடர்பாக தெளிவான விதிமுறைகள் சட்டமூலத்தில் இல்லை எனவும் மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியலமைப்பால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் பொது வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.