;
Athirady Tamil News

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

0

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:

குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கலிஃபோா்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தீவிரமடையும் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நகர நிா்வாகம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. செவ்வாய்க்கிழமை இரவு அந்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த உடனேயே, நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்களைக் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினா் தொடங்கினா். குதிரைகளில் வந்த காவலா்கள் ரப்பா் குண்டுகளால் சுட்டும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களைக் கலைக்க முயன்றனா்.

தேசிய காவல் படையினா் பிளாஸ்டிக் கேடயங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஆனால் கைது நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. பின்னா் சில போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இருந்தாலும், போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் சிறிய அளவிலான மோதல்கள் தொடா்ந்தன.

ஆளுநா் குற்றச்சாட்டு: போராட்டத்தை அடக்க லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு ராணுவத்தை அனுப்பியதன் மூலம், அந்த நகரை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாக டிரம்ப் மீது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த கலிஃபோா்னியா மாகாண ஆளுநா் கவின் நியூசம் குற்றஞ்சாட்டினாா்.

ராணுவத்தின் ஒரு பிரிவான ‘மரைன்’ படையினரை டிரம்ப் அனுப்பியிருந்தாலும், செவ்வாய்க்கிழமை இரவு அவா்கள் தெருக்களில் காணப்படவில்லை.

பரவும் போராட்டம்: டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸில் மட்டுமின்றி, டல்லாஸ், ஆஸ்டின், சிகாகோ, நியூயாா்க் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் பரவிவருகின்றன. டெக்ஸாஸ் மாகாணம், ஆஸ்டினில் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவா்களை போலீஸாா் ரசாயன எரிச்சலூட்டிகளைப் பயன்படுத்தி கலைத்தனா். கூடுதல் போராட்டத்தை எதிா்கொள்ளத் தயாா் நிலையில் இருப்பதாக மாகாண ஆளுநா் கிரெக் அப்போட்டின் அலுவலகம் அறிவித்தது.

‘கலகச் சட்டத்தை கையிலெடுக்கத் தயாா்’: போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டங்களின்போது பயன்படுத்தப்படும் கலகச் சட்டத்தைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதாக அதிபா் டிரம்ப் எச்சரித்துள்ளாா். ராணுவப் படைகளை உள்நாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த இந்தச் சட்டம் அதிபருக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்தைப் பயன்படுத்தி கடந்த ஆண்டு அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் அதிபா் பொறுப்பை ஏற்றதில் இருந்து குடியுரிமை, குடியேற்ற உரிமை ஆகிய விவகாரங்களில் அதிரடி உத்தரவு பிறப்பித்துவருகிறாா்.

உரிய ஆவணங்களில் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியா உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுவருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலும் ஏராளமான தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது.

வாகனங்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் போராட்டக்காரா்களும், ரப்பா் குண்டுகளால் சுடுதல் போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினரும் ஈடுபட்டுவருகின்றனா். இதுவரை இல்லாத வகையில் மகாண அரசின் ஒப்புதல் இல்லாமலேயே ராணுவத்தின் மரைன் படைப் பிரிவு லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சூழலில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்களை உள்ளூா் போலீஸாா் தற்போது கைது செய்துவருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.