இஸ்ரேலுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம்! – ஹிஸ்புல்லா திட்டவட்டம்
இஸ்ரேல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி சரணடைய மாட்டோம் என்று லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் நையீம் ஃக்வாஸ்ஸெம் தெரிவித்தார்.
கடந்த நவம்பரில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி, லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மொஹரம் பண்டிகையையொட்டி தெற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்காக நையீம் ஃக்வாஸ்ஸெம் பேசியிருப்பவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
அதில், ‘இஸ்ரேல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகே, நாங்கள் ஆயுதங்களை கைவிடுவதைப் பற்றி ஆலோசிப்போம். இஸ்ரேல் கைது செய்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும்’ என்றார் அவர்.
இதனிடையே, தெற்கு லெபனானில் ஷிட் பிரிவு முஸ்லிம்கள் நடத்திய அஷுரா பேரணியில் ஹிஸ்புல்லாவின் ஆயிரக்கணக்கான அதரவாளர்கள் பங்கேற்றனர். அப்போது கறுப்பு ஆடைகளை அணிந்துகொண்டு தங்கள் கைகளில் லெபனான், பாலஸ்தீன் மற்றும் ஈரான் தேசியக் கொடிகளை ஏந்தி அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
எனினும், இது குறித்து லெபனான் அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.