;
Athirady Tamil News

மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

0

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பாலாசோர் மாவட்டத்தில் உள்ள ஃபகிர் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு அந்தக் கல்லூரியின் கல்வித் துறை தலைவரான உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி 3 நாள்கள் உயிருக்குப் போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உதவிப் பேராசிரியர் சமீரா குமார் சாஹு, கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

மாநிலம் முழுவதும் போராட்டம்

இந்த நிலையில், மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் முழு கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெறும் நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு பேரணி, ரயில் மறியல், கடையடைப்பு போன்ற பல்வேறு வகையான போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிஸா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறியதாவது:

“அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிஸா போராட்டத்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, மாணவியின் தற்கொலைக்கு நீதி கோருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒடிஸா எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் தொண்டர்கள், ஒடிசா பேரவை வளாகத்துக்கு வெளியே புதன்கிழமை காலை மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் கலைக்க முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.