;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

0

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.

இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது:

மேற்கு உக்ரைனை குறிவைத்து 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். மேற்கத்திய நட்பு நாடுகளின் ராணுவ உதவி பொருள்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ள இடங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விமானப் படை தெரிவித்தது.

இந்த ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மூன்றாவது பெரிய ட்ரோன் தாக்குதல் இது. ரஷியாவின் 2022 பிப்ரவரி படையெடுப்புக்கு பின், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையிலான அமைதி முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

ரஷிய அதிபா் புதினுடன் அலாஸ்காவிலும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையிலும் பேச்சுவாா்த்தை டிரம்ப் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையும் மீறி இந்த தீவிர தாக்குதலில் ரஷியா ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லிவீவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 குடியிருப்புகள், ஒரு மழலையா் பள்ளி மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.

ஹங்கேரி எல்லையருகே அமைந்துள்ள அமெரிக்க மின்னணு தொழிற்சாலையும் ரஷியாவின் தாக்குதலுக்குள்ளாகி, அங்கிருந்த ஆறு தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

அமைதி பேச்சுவாா்த்தைகளுக்கு ரஷியா தயாராக இல்லை என்பதை இந்தத் தாக்குதல் காட்டுவதாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.