வங்கதேசத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி! அதிர்வுகளில் சிக்கிய இந்திய மாநிலங்கள்!
வங்கதேசத்தில், ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கதேச நாட்டின், நார்சிங்டி மாவட்டத்தில் நேற்று (நவ. 21) காலை 10.08 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியானதாகவும் உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன், ஏராளமான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் வங்கதேசத்தின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான அதிர்வுகள் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்திய மாநிலங்களில் பொருள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.