;
Athirady Tamil News

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை ஆய்வு: வெளியுறவு அமைச்சகம்

0

புது தில்லி/டாக்கா, நவ. 26: வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடா்பான மாணவா்களின் வன்முறைப் போராட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தீவிரமடைந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவா் வங்கதேசத்தைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

மாணவா் போராட்டங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் ஆக. 15 வரை சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கலவரங்களை ஒடுக்க கடுமையான முறைகள் பயன்படுத்தப்பட்டதாக ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அஸாதுஸ்ஸமான் கான் கமல், முன்னாள் காவல்துறை அதிகாரி செளத்ரி அப்துல்லா அல் மாமூன் ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டாக்காவில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம், ஷேக் ஹசீனா மற்றும் அஸாதுஸ்ஸமான் கான் கமலுக்கு மரண தண்டனையும், சௌத்ரி அப்துல்லா அல் மாமூனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கடந்த 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் அதிகாரபூா்வமாக கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘இந்தக் கோரிக்கை இப்போது இந்தியாவின் நீதித் துறை மற்றும் உள்நாட்டு சட்ட விதிகளின்படி ஆராயப்பட்டு வருகிறது. வங்கதேச மக்களின் அமைதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மைக்குத் தொடா்ந்து ஆதரவளிக்கிறோம். இதுகுறித்து அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூா்வமாகச் செயல்படத் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினாா்.

வங்கதேசம் கருத்து: வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகா் எம்.தௌஹித் ஹூசைன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இந்தியா எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது நிலைமை வேறு. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்து, ஷேக் ஹசீனா குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின்படி, தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம் இந்திய அரசிடம் இந்தக் கோரிக்கை முறைப்படி சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா நிச்சயம் பதிலளிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்று தெரிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.