;
Athirady Tamil News

கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி இடைநிறுத்தம் – வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை

0

பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 25ஆம் திகதி அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தைச் செலுத்தியமை தொடர்பில் காணொலி ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

இம்முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று, கடந்த 23ஆம் திகதி அன்று மதியம் 1.40 மணியளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தால் அதிகார சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, தொடர்புடைய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு உத்தியோகபூர்வமான கடும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் 021-228 5121 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.