;
Athirady Tamil News

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்

0
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் அமைப்புகள் தலைமை ஏற்று குறித்த போராட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-

முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் ‘கொக்கச்சான்குளம்’ என்ற தமிழ் கிராமம் ‘கலாபோகஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக முண்டு கொடுத்த ரணில் – மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் கொக்கச்சான்குளம் கலாபோகஸ்வெல என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்த கொக்கச்சான்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதி பெற்று தருவதாக கூறி சிங்கள மக்களுக்கு குறித்த பகுதியில் காணி உரிமம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு அப்போது வவுனியாவில் இடம்பெற்றபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

குறித்த நிகழ்வில் தமிழ் கிராமம் ஒன்றை சிங்களமயமாக்கிய நிகழ்வில் சம்பந்தனின் ஆசிச் செய்தியை அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வாசித்தார். மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் அமர்ந்திருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில் தற்போது கொக்கச்சாங்குளத்தை அபகரிக்கப்போகிறார்கள் என தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுவது எவ்வாறு எனக் கேட்க விரும்புகிறேன்.

அச்சு ஊடகங்கள் கிவுல் ஓயா தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்ற நிலையில் வேறு வழியின்றி தமது வங்கு ரோத்து அரசியலை முன்னெடுப்பதற்காக போராட்ட அழைப்பு விடுவதை எவ்வாறு ஏற்க முடியும்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்த போது மௌனமாக இருந்த தமிழரசு கட்சியினர் தற்போது போராட்ட அழைப்பை விடுப்பது ஏன் எனக் கேட்க விரும்புகிறேன்.

நான் பாராளுமன்றத்தில் குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விவாதித்தபோது எனது எதிர்ப்பை வெளியிட்டேன். வேண்டுமானால் எனது கட்சி கிவுல் ஓயாவுக்கு எதிராக போராட்ட அழைப்பை விடுக்க முடியும் .

நாங்கள் போட்டி போட வர விரும்பவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அரசியலை மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நிக்க மாட்டோம்.

இதேபோன்று கரைத்துறைப் பற்று பிரதேச சபை தமிழ் கட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அரசாங்க கட்சியிடம் சென்றமைக்கு தமிழரசு கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் மகாவெலி (L) வலையம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுகிற நிலையில் அங்குள்ள காணி, கட்டட அதிகாரங்கள் தமிழ்க் கட்சிகளிடம் இருந்த அரசாங்க தரப்பிடம் தமிழரசுக் கட்சி நன்கு திட்டமிட்டே வழங்கியுள்ளது.

இவ்வாறு பல கபடத்தனமான செயல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும், தமிழரசு கட்சியாகவும் செய்ய துணிந்தவர்கள் தமிழ் மக்களின் அரசியலை எவ்வாறு தீர்மானிக்க முடியும்.

கிவுல் ஓயா தமிழர் பகுதி சிங்களமயமாக்கப்படுவதற்கு எதிராக எமது எதிர்ப்பினை காட்ட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆகவே தமிழரசு கட்சி குறித்த போராட்ட அழைப்பை விடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத நிலையில் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அதனை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும். அப்போது எமது ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.