ராஞ்சியில் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!
ராஞ்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த தொழிலதிபர் அனுராக் சரவ்கி தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹிந்த்பிரி காவல் நிலையப் பகுதியில் நடந்தது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ராணா கூறுகையில், இறந்த அனுராக் தொலைபேசியில் யாரிடமோ உரத்த தொனியில் பேசியிருக்கிறார். அவரது அறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. பின்னர் திடீரென அவர் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்தார்.
அவரது அறையில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. முழுமையான விசாரணை நடந்து வருகிறது என்றார். சம்பவம் நடந்த நேரத்தில், சரவ்கியின் வயதான பெற்றோர் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் இருந்துள்ளனர்.
ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இல்லை என்றும் கோட்வாலி டிஎஸ்பி பிரகாஷ் சோய் தெரிவித்தார். இது தற்கொலை வழக்கு என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சரவ்கியின் மனைவி ராஞ்சி வந்த பிறகு, சரவ்கியின் மரணம் தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.