இன்று ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகின்றன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 451,463 ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற வானிலை
தற்போது நிலவும் சீரற்ற வானிலை அல்லது ஏதேனும் அனர்த்தங்கள் காரணமாக மாணவர்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கருத்துத் தெரிவிக்கையில், ஏதேனும் இடர் நிலைகள் காரணமாகப் பரீட்சைக்குச் செல்வதில் தடை ஏற்பட்டால் உடனடியாக 117 (அனர்த்த மேலாண்மை மத்திய நிலையம்) அல்லது 1911 (பரீட்சைத் திணைக்களம்) எனும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், மாணவர்கள் சிரமமின்றி பரீட்சைக்குச் செல்வதை உறுதிப்படுத்த பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.