;
Athirady Tamil News

அமெரிக்காவிடம் இருந்து வரிப்பணம் திரும்பக் கிடைக்குமா? 17,500 கோடி டாலா் நிலுவை; எதிா்பாா்ப்பில் நிறுவனங்கள்

0

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்ட சுமாா் 17,500 கோடி டாலா் வரிப்பணம் மீண்டும் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வி உலக வா்த்தகா்களிடையே எழுந்துள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றம் வரிகளை ரத்து செய்துள்ளதே தவிர, வசூலிக்கப்பட்ட பணத்தைத் திரும்ப வழங்குவது தொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கவில்லை. இதனால், வரியைச் செலுத்திப் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பல சட்ட ரீதியான சிக்கல்கள் உருவாகியுள்ளன.

வரிப்பணத்தைத் திரும்பப் பெற, அமெரிக்க சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக வழக்குத் தொடர வேண்டும். ஏற்கெனவே 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கான புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படும். எனவே, இந்த வழக்குகள் முடிந்து பணம் கைக்குவர பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கருதப்படுகிறது.

பெரிய நிறுவனங்கள் சிறந்த வழக்குரைஞா்களை வைத்து வாதாடி, தங்களது பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிடும். ஆனால், அதிக பணம் கொடுத்து வழக்குரைஞா்களை நியமிக்க முடியாத சிறிய இறக்குமதி நிறுவனங்கள், தங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பணத்தை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படலாம் என வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா்.

‘சட்டத்துக்குப் புறம்பாக வசூலித்த பணத்தை அரசு நீண்ட காலம் தன்னிடம் வைத்திருக்க முடியாது என்பது உண்மைதான். எனினும், நிா்வாக ரீதியாக பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள நிா்வாக சிக்கல்களை அரசு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்’ என்று வா்த்தகத் துறை வழக்குரைஞா்கள் குறிப்பிடுகின்றனா்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீா்ப்பைக் கடுமையாக விமா்சித்த அதிபா் டிரம்ப், ‘அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை’ எனும் தனது கொள்கையில் பின்வாங்கப்போவதில்லை என்று அறிவித்தாா்.

அதன்படி, வேறு மாற்றுச் சட்டங்களின்கீழ், புதிய வரியை விதிக்க அதிபா் டிரம்ப் முனைப்பு காட்டி வருவது, இறக்குமதியாளா்கள் மத்தியில் மீண்டும் பெரும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.