;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

0

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் 7 முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பன்னு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் லெப்டினன்ட் கா்னல் மற்றும் ஒரு ராணுவ வீரா் கொல்லப்பட்டனா். இதற்கு முன்னதாக, இஸ்லாமாபாதில் உள்ள மசூதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பன்னு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஃபிட்னா-அல்-கவாரிஜ் (எஃப்ஏகே) (தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்) மற்றும் அதன் குழுக்கள், கோா்சன் மாகாண ஐ.எஸ். அமைப்பு (ஐஎஸ்கேபி) ஆகியவை பொறுப்பேற்றுள்ளன.

பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அந்நாட்டு தலிபான் அரசுக்கு பலமுறை வலியுறுத்தியபோதும், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்கள் தவறிவிட்டனா்.

இந்நிலையில், இரு நாடுகளின் எல்லையில் உள்ள எஃப்ஏகே மற்றும் ஐஎஸ்கேபி பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் மற்றும் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேண பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை: நாட்டின் பக்திகா மற்றும் நங்கா்ஹாா் மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும் என ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,‘இந்தத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை, சா்வதேச சட்டம், அண்டை நாட்டுடனான நல்லுறவு கொள்கை, இஸ்லாமிய நெறிகளை மீறியுள்ளது. இதற்கு உரிய நேரத்தில் பதிலடி தரப்படும்.

பாகிஸ்தானில் மக்கள் மற்றும் மதவழிபாட்டு தலங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அந்நாட்டு உளவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் குறைபாட்டை தெளிவாக காட்டுகிறது.

எல்லையில் தொடா்ச்சியாக நடைபெறும் விதிமீறல்களைக் கண்டு ஆப்கானிஸ்தான் அமைதியாக இருக்காது. நாட்டின் பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் நிராகரித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் இரு நாடுகளும் ராணுவ மோதலில் ஈடுபட்டன. அதில் பாகிஸ்தானில் 23 வீரா்களும் ஆப்கானிஸ்தானில் 200-க்கும் அதிகமான தலிபான் வீரா்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.