;
Athirady Tamil News

NDB வங்கி மோசடி; வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக உள்ளதா!

0

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) 13.2 பில்லியன் ரூபா இடம்பெற்ற உள்ளக நிதி மோசடி தொடர்பில் தாம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 10 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி தேசிய அபிவிருத்தி வங்கி போதிய மூலதனம் மற்றும் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், அவை குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் கணக்குகளுக்கோ வைப்புக்களுக்கோ பாதிப்பில்லை
இந்தச் சம்பவத்தினால் வாடிக்கையாளர் கணக்குகளுக்கோ அல்லது வைப்புக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கியின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், வைப்புச் செய்தவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள மத்திய வங்கி, இது தொடர்பாக வங்கியுடனும் ஏனைய தரப்பினருடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, தமது ஊழியர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபா பெறுமதியான உள்ளக நிதி மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய அபிவிருத்தி வங்கி வெளிப்படுத்தியிருந்தது.

அதோடு வாடிக்கையாளர்களின் மீதிக் கணக்குகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும், வங்கியின் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.