ஈரான் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு பயணம்
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா, கத்தார் மற்றம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (300 கோடி டாலர்) கூடுதல் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே வழங்கிய ரூ.42 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த 3 ஆண்டுகள் கூடுதல் கால அவகாசமும் வழங்கி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த பயணத்தின்போது வெளியாக உள்ளன. இது பாகிஸ்தான் அன்னியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி மற்றும் கத்தார் தலைவர்களுடன் ஷெபாஸ் ஷெரீப் விரிவாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணத்தின் இறுதியாகத் துருக்கி செல்லும் அவர், அங்கு நடைபெறும் ‘அந்தல்யா தூதரக மாநாட்டில்’ கலந்து கொள்கிறார். துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்த பயணத்தின்போது துணைப்பிரதமர் இஷாக்தார் மற்றும் முக்கிய மந்திரிகள் ஷெபாஸ் ஷெரீப்புடன் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் இந்த பயணம் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.