;
Athirady Tamil News

பெண்ணை காண்பித்து எரிபொருள் பெற முயற்சி; வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தை பதம் பார்த்த நபர்!

0

நாட்டில் எரிபொருளுக்கு இன்று முதல் QR முறைமை அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கெஸ்பேவ – பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்தமைக்காக, அதன் ஊழியரை கார் சாரதி தாக்கியுள்ளதாக கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியரின் கன்னத்தில் விழுந்த அறை
இன்று (22) அமுலிலுள்ள வாகன இலக்கத் தகட்டின் இரட்டை எண்களுக்குப் பதிலாக, ஒற்றை எண்ணைக் கொண்ட குறித்த வாகனத்திற்கு எரிபொருள் வழங்க ஊழியர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சாரதி, ஊழியரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணைக் காண்பித்து, அவர் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி எனக்கூறி சாரதி எரிபொருளைப் பெற முயன்றுள்ளார்.

எனினும், ஊழியர் அதனை நிராகரித்தமையாலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள வாகன இலக்கத்தின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரான சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.