பேருந்துகள் இன்றி மக்கள் தவிப்பு! வாக்குப்பதிவை இரவு 8 வரை நீட்டிக்க வேண்டும்! விஜய் கடிதம்
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டில் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் ஆழ்ந்த கவலையுடனும், அதிருப்தியுடனும் நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பெருநகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்திகள் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல பேருந்து வசதியோ, பிற போக்குவரத்து வசதியோ இல்லாமல் உள்ளனர்.
மாநிலப் போக்குவரத்துக் கழகமும் நிர்வாகமும் திட்டமிட்டுச் செய்த தவறான ஏற்பாட்டின் விளைவாகவே இது தோன்றுகிறது. இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாக்களிக்கும் அடிப்படை உரிமையின் மீதான நேரடித் தாக்குதலாகவே இது கருதப்படுகிறது.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலும், பிற இடங்களிலுள்ள இதுபோன்ற முனையங்களிலும் தேர்தல் நாளன்று காணப்படும் காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன.
சென்னை மற்றும் போக்குவரத்து முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள மாநிலப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனடியாக பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
போக்குவரத்து இடையூறுகளால் தாமதமாக வந்த வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதையும், நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தையும் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.