;
Athirady Tamil News

சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஈரான்!

0

ஈரான் தலைநகர் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமானச் சேவைகள் மீண்டும் இன்று (ஏப். 25) முதல் தொடங்கியது.

அமெரிக்கா – இஸ்ரேலிய படைகள் கூட்டாக இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கியதால், ஈரானின் வான்வெளிப் பாதைகள் முழுவதுமாக முடக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமான சேவைகளை ஈரான் மீண்டும் தொடங்கியது.

தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், ஓமன் தலைநகர் மஸ்கட் மற்றும் சௌதி நகரமான மதீனா ஆகிய இடங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாக ஈரானின் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

விமானங்களைக் கண்காணிக்கும் தளமான Flightradar24-இன் தரவுகளின்படி, இன்று காலையில் இஸ்தான்புல் நோக்கி மூன்று விமானங்கள் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தின் மத்தியில், ஈரான் இந்த மாதத் தொடக்கத்தில் தனது வான்வெளியைப் பகுதியளவு மீண்டும் திறந்தது. இந்தப் போர்நிறுத்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.