;
Athirady Tamil News

15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு ; வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு

0

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலதிக விசாரணை
இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விசாரணைகளின் போது, சுமார் 15 கொலைகளைத் தான் வழிநடத்தியதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிகவின் கொலையைத் தானே திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரன் சிறையில் இருந்தபோது, அவரை மிகக் கடுமையாகச் சோதனை செய்ததோடு, உணவு மற்றும் பார்வையாளர்களுக்குத் தடைகளை ஏற்படுத்தியமையே இந்தப் பழிவாங்கலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சோதனையின் போது, பொலிஸ் வாகனங்களின் டயர்களைத் துளைப்பதற்காக ஆணிகள் பொருத்தப்பட்ட பலகைகள் வீட்டைச் சுற்றி வைக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டது.

இதேவேளை, குறித்த சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சட்டத்தரணி ஒருவரைப் பற்றியும், அவர் குற்றங்களுக்குத் துணை நின்றாரா அல்லது தொழில்முறை ஒழுக்கங்களை மீறினாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரந்தெனிய சுத்தா மற்றும் SF ராஜு ஆகியோரின் ஆயுதங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் இரகசியமாகத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.