எச்-1பி விசாவை 3 ஆண்டுகள் நிறுத்திவைக்க டிரம்ப் அரசு புதிய மசோதா!
அமெரிக்காவில் இந்திய ஐடி பணியாளா்கள் உள்பட வெளிநாட்டினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ‘எச்-1பி’ விசா திட்டத்தை 3 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான புதிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சோ்ந்த அரிசோனா மாகாண எம்.பி. எலி கிரேன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளாா். இந்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வெளிநாட்டுப் பணியாளா்களுக்குக் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
தற்போது ஆண்டுக்கு 65,000-ஆக உள்ள விசாக்களின் எண்ணிக்கையை வெறும் 25,000-ஆகக் குறைக்கவும்; எச்-1பி விசா பெறுவோருக்கான குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் 2 லட்சம் டாலராக (சுமாா் ரூ.1.88 கோடி) இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய குலுக்கல் முறைக்கு மாற்றாக, அதிக ஊதியம் பெறுபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறையை அமல்படுத்த மசோதா கோருகிறது. ஏனெனில், அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டுப் பணியாளா்களைப் புறக்கணித்துவிட்டு, குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரைத் திணிப்பதாக மசோதாவை ஆதரிக்கும் உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
ஒரு குறிப்பிட்ட பணிக்கு வெளிநாட்டினரை அமா்த்தும்போது, அமெரிக்கா்களைப் பணிநீக்கம் செய்யக்கூடாது மற்றும் தகுதியான பணியாளா் உள்நாட்டில் கிடைக்கவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, எச்-1பி விசா மூலம் அமெரிக்கா வருபவா்கள், நிரந்தர குடியுரிமை பெறுவதைத் தடுக்கும் கடுமையான விதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. விசா வைத்திருப்பவா்கள் தங்களின் குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அழைத்து வரவும் தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.