;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு எதிர்ப்பு

0

கனடாவின் வான்கூவர் நகரில் இந்த ஆண்டு கட்டப்பட உள்ள இரண்டு செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்கு எதிராக, கிரான்வில் வீதியில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியை நடத்தியுள்ளனர்.

வாட்டர்ஃபிரண்ட் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் பங்கேற்றவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் பெருநிறுவனங்களின் சுயநலம், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களால் ஏற்படும் அதிகப்படியான நீர் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

தற்போது நடப்பவை அனைத்தும் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளன என ஆஷ்லே என்ற போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான தரவு மையங்களின் பாதிப்புகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “இந்த மையங்கள் நமது இயற்கை வளங்கள் அனைத்தையும் உறிஞ்சி, மக்கள் வாழ தகுதியற்ற இடமாக நிலத்தை மாற்றிவிடுகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

நீர் நுகர்வு, சத்தம், வெப்பம் மற்றும் கனடா அரசின் ‘தரவு இறையாண்மை’ இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளதாக வான்கூவர் நகரக் கவுன்சிலர் சீன் ஓர் (Sean Orr) தெரிவித்துள்ளார்.

மேலும், “மிகவும் நெருக்கடியான, நிலப் பற்றாக்குறை உள்ள இந்த நகரத்தில், நிலத்தை இப்படிப்பட்ட மையங்களுக்குப் பயன்படுத்துவது சிறந்த வழிதானா?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் ‘டெலஸ்’ (Telus) நிறுவனம், இந்த செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு புதிய உலகளாவிய தரத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.