;
Athirady Tamil News

லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்; 14 பேர் பலி

0

பெய்ரூட்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் மோதலில் அந்நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. லெபனானின் கடலோர நகரான டயர் என்ற நகரில் உள்ள மக்களை வெளியேறும்படி கூறி விட்டு, அதன்பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில், பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. அதில் வசித்து வந்த மக்களில் பலர் பலியானதுடன், பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இதில், பெண்கள், குழந்தைகள் என 5 பேர் மற்றும் லெபனான் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 14 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனை லெபனான் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. இதேபோன்று, ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் டி.சி.யில் நாளை முதன்முறையாக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர். எனினும், ஹிஸ்புல்லா அமைப்பு இந்த பேச்சுவார்த்தையை புறக்கணித்து உள்ளது. லெபனானில் ராணுவ தாக்குதல்களை அதிகரிக்கும்படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.